Breaking News

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது


இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது. இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற பிப்ரவரியில் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்படுவது இலங்கை அரசுக்கு ஒருவித சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

அதே வேளை, இதை அப்படியே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு இல்லை. ஐ.நா பட மூலாதாரம்,UNHRC முன்னதாக, தீர்மானம் மீதான இறுதி வாதத்தின்போது இலங்கை அரசு சார்பில் பேசிய அதன் பிரதிநிதி, "எங்கள் நாட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த வரைவு தீர்மானம் பற்றிய அசாதாரணமான யோசனை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறும். இந்த தீர்மானத்தின்படி திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால், அதற்காக 2.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி தேவை." "அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இலங்கை அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்மானம், இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். 

இலங்கை இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளைக் காப்பதில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பொறுப்பு இருப்பதாக கூறினார். அண்டை நாடு எனும் அடிப்படையில் இறுதிப்போருக்கு பின்னர் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதாக அவர் தெரிவித்தார். சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதைப் போல, 13வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தினார். 

ஐ.நா பட மூலாதாரம்,UNHRC சீனா, பாகிஸ்தான் வாக்கெடுப்பின்போது கூறியது என்ன? 

மனித உரிமைகள் என்ற பெயரில் இவ்வாறான தீர்மானங்கள் மூலம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை தாங்கள் எதிர்ப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்த சீன அரசின் பிரதிநிதி, இந்தத் தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார். பிற நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்தார். இலங்கை அரசு அமைதி மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சீனா தரப்பில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டது. 

பாகிஸ்தானும் இந்தத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. சீனாவைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தத் தீர்மான வரைவு ''சர்வதேச தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதில் தோல்வியடைந்து விட்டது," என்று கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் இந்தத் தீர்மானம் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். 

கொரோனா காலத்தில் முஸ்லிம்கள் உடல்கள் புதைக்க மறுக்கப்பட்டது குறித்தும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் பேசிய அவர், கொரோனாவால் இறந்த இஸ்லாமியர்கள் உடலைப் புதைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். வெனிசுவேலா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. 

ஐ.நா பட மூலாதாரம்,UNHRC இந்தியாவுக்கு தயக்கம் ஏன்? 

இலங்கையின் பிரதான துறைமுகமாக இருக்கும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஏற்கனவே ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அதை இலங்கை துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்று கூறிய இலங்கை அரசு இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து பிப்ரவரி தொடக்கத்தில் பின்வாங்கியது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடர்வதற்கு இந்தியா முயற்சி செய்து கொண்டுள்ளது. 

எனவே இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தால் இந்த துறைமுகத் திட்டத்தில் பின்னடைவு ஏற்படும் என்று இந்திய அரசு கருதுகிறது. ராஜபக்ஷ சகோதரர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தபின் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது இருநாட்டு வெளியுறவுத் தொடர்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. 

இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இந்த இரண்டு கூறுகளையும் கருத்தில் கொண்டே இந்திய அரசு இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என கருதப்படுகிறது. மு.க. ஸ்டாலின், ப. சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை இந்திய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர். 

இதேபோல உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று, இலங்கை அரசுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு விலகியிருந்தது. அப்போது இலங்கைக்கு எதிராக 23 நாடுகளும் ஆதரவாக 47 நாடுகளும் வாக்களித்தன. அதற்கு முன்பு 2012 இலங்கை போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.