Breaking News

பொலிஸாரின் அதிரடித் திட்டம் – எச்சரித்த அஜித் ரோஹண!


பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் இன்று முதல் பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

வீதி விபத்துக்களை குறைக்கவும், கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறிவதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

பொதுமக்கள் தொடர்ச்சியாக நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்பட்டால் அந்தப் பிரதேசத்தை வெகுவிரைவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ஆனால், இதற்கமைய செயற்படாவிட்டால், அந்தப் பிரதேசத்தை நீண்டகாலம் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதேநேரம், பி.சி.ஆர் அல்லது எண்ரிஜன் பரிசோதனைக்கு மாதிரிகள் கோரப்பட்டால், மறுப்பு தெரிவிக்காமல் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், அங்கிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேற முடியாது. எவராவது வெளியேறுவாராயின், தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.