யாழில் வெள்ளத்தில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு!
தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் அண்மையிலுள்ள மிருசுவில் நாவலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மாகாலிங்கம் மகேஷ் (வயது - 28) என்வரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புரெவி புயல் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் பெய்த கடும் மழையினால் வீதிகள், உள் ஒழுங்கைகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுகிறது இந்நிலையிலேயே இந்நபரும் நீருக்குள் தவறுதலாக வீழ்ந்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.