லெஸ்பியன் கேரக்டரில் அஞ்சலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் திறமையாக நடிக்க தெரிந்த மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர், வாயாடி பெண் போன்ற கேரக்டரில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அஞ்சலியை குடும்ப பாங்கான கேரக்டர்களிலும், கலகலப்பான வேடங்களிலும் பார்த்து பழகிய ரசிகர்கள் திடீரென அவரை லெஸ்பியன் கேரக்டரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள ’பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள நான்கு கதைகளில் ஒரு கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.
இதில் அஞ்சலி மற்றும் கல்கி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இருவரும் லெஸ்பியன் கேரக்டரில் நடித்து உள்ளதாக சமீபத்தில் வெளியான டிரைலரில் இருந்து தெரிகிறது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் அஞ்சலி லெஸ்பியன் கேரக்டரில் நடித்ததை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு கதைகளுமே காதல் காரணமாக மகள்களை பெற்றோர்களே ஆணவக்கொலை செய்யும் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.