Breaking News

வெடிகுண்டுடன் கண்டி நோக்கி பஸ்ஸில் சென்ற முன்னாள் பெண் போராளி!


கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் வைத்தே, இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த குண்டை மறைத்துக் கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  



புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் , குறித்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்திற்கும் குண்டொன்றை கொண்டு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

இதன் பின்னணியில் சுவிஸ் நாட்டில் இருந்து ஒருவர் செயற்பட்டு வருவதாகவும், அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கோபியின் சகோதரர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நெடுங்கேணி வனப் பகுதியில் இராணுவ தாக்குதலினால் கோபி கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, இந்த கைது நடவடிக்கை தொடர்பில் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.