8 சாதனை பெண்கள் பற்றிய கதைகள்!
நம் வாழ்வில் எத்தனையோ பெண்களை நாம் கடந்து வந்திருப்போம். சிலரின் வாழ்க்கையும், அனுபவமும், சாதனையும் நமக்கு தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். ஒரு துறையில் பெண் சாதிப்பதையும், ஆண் சாதிப்தையும் நாம் ஒப்பிடவே முடியாது. குடும்பம், குழந்தைகள், வேலை, லட்சியம் என ஒவ்வொரு பெண்ணும் இந்த சமூகத்தில் எத்தனையோ தடைகளையும், சவால்களையும், அவமானங்களையும் வென்று தான் தனக்கான ஒரு பெயரையும், புகழையும் பெற வேண்டியுள்ளது. அந்த வகையில் 'சமநிலையான உலகமே சிறந்த உலகம்'.
பெண்களின் சாதனையை கொண்டாடுவதன் மூலம் பாலின சமநிலையை உருவாக்குவோம். இதன் மூலம் சர்வதேச மகளிர் தினத்தை வெற்றிகரமான இயக்குவோம். 8 வெவ்வேறு துறைகளில் சாதித்த மற்றும் நாம் சாதிக்க வழிகாட்டிய 8 பெண்களின் உத்வேக கதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.பெண்ணின் சாதனையை போற்றி பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.
8 உத்வேகம் தரும் பெண்களின் கதைகள்
அனிதா பால்துரை (Anita Balturai)
இந்திய கூடைப்பந்து மகளிர் அணியின் கேப்டன் அனிதா பால்துரை. ஃபிபா ஆசியக் கோபை இந்தியாவுக்கு க் கிடைக்கக் காரணமானவர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, இந்தியக் கூடைப்பந்து பெண்கள் அணியின் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்பவர். உலகின் மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்டவர். ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக எட்டு முறைக்கும் மேல் கலந்துகொண்ட ஒரே இந்திய வீராங்கனை இவர்..அறுவை சிகிச்சை, திருமணம், குழந்தை என இவரது வாழ்க்கை சூழல் மாறினாலும் இவரது கனவு எல்லா தடைகளையும் வென்று வெற்றிப் பாதையை நோக்கியே பயணித்தது. எல்லா சூழ்நிலையிலும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்காதவர்.
தனக்கு மகன் பிறந்த பிறகு அனிதா எடுத்துக் கொண்ட இடைவேளையில் சோர்வடையாமல் தன்னை பன்மடங்கு வலிமையாக்கி கொண்டு மறுபடியும் அணியின் கேப்டனாக களம் இறங்கினார். மீண்டும் மற்றொரு குழந்தை பிறந்தாலும், அனிதா தன் கனவை நோக்கிய ஓட்டத்தை நிறுத்தவேயில்லை, இன்னும் அதிக உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையை இழக்காமல் அடுத்த மகுடம் சூட்ட காத்திருக்கிறார் இந்த நம்பிக்கை வீராங்கனை.
வளர்மதி (Valarmathi)
இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் திட்டங்களில் தொலையுணர்வு செயற்கைக்கோள் திட்டத்தின் முதல் பெண் இயக்குனர். ரிசாட் 1 செயற்கைக்கோள், இந்தியா சார்பில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு தங்குதடையின்றி விண்வெளியைத் தொட்டு வெற்றி பெற்றபோது தேசத்தினை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வளர்மதி. இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி ’ரேடார் இமேஜ் சாட்டிலைட்' (ரிசாட் -1) திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். இவர் தமிழகம் அரியலூரினைச் சேர்ந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க அனுமதி கிடையாது. அப்பேற்பட்ட பின் தங்கிய இந்த பகுதியிலிருந்து உலக அளவில் அறிவியல் விஞ்ஞானியாக தடம் பதிக்கிறார்.
அவர் பணியில் சேர்ந்தபோது, 25-க்கும் குறைவான பெண்களே இஸ்ரோவில் பணிபுரிந்தார்கள். இவரைப் போன்ற பல பெண்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக, இன்றைக்கு இஸ்ரோ நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பணிபுரிந்துவருகிறார்கள். பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர். கிராமத்தில் படித்தவர் விஞ்ஞானியாக முடியாது என்பதை உடைத்து எறிந்து பல மாணவர்களுக்கும், பல பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் வளர்மதி.
தீபா மோகன்ராஜ் (Deepa Mohanraj)
குழந்தைக்காக எதையும் செய்வாள் தாய் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டு தீபா மோகன்ராஜ் . சேவை மனப்பான்மை இயல்பிலேயே இருந்த தீபாவிற்கு தனது இரண்டாவது குழந்தையின் மூலம் பல ஆயிரம் குறைபாடுள்ள குழந்தைகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார். தனது குழந்தை ஸ்பெஷல் சைல்டு என்று தெரியவந்த பிறகு அவளுக்கான ஸ்பெஷல் பள்ளியை தேர்ந்தெடுக்க தேடலை ஆரம்பித்த தீபாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பள்ளிகளில் அணுகுமுறையம் பராமரிப்பும் சரியில்லை என்று உணர்ந்தார்.
பல முயற்சிகளுக்கு பிறகு தன் விருப்பப்படி ஒரு மேம்பட்ட அன்பான சூழல் கொண்ட ஒரு அகாடமியை தொடங்குகிறார் தீபா. அது தான் ‘‘கொமாரம் பிரசாந்தி அகாடமி’ 15 குழந்தைகளோடு ஆரம்பித்த இந்த அகாடமியில் இன்று 135 மாணவர்களும் இருக்கிறார்கள். பீஸ் கட்ட முடியாத குழந்தைகளுக்கு இவர் தனக்கு தெரிந்தவர்களிடம் அந்த குழந்தைக்காக ஸ்பான்ஸ்ர் பண்ணச் சொல்லி கேட்கிறார். ஆட்டிசம், டவுன்ஸ் சிண்ட்ரோம், செரிபிரல் பால்சி என பல வெவ்வேறு குறைபாடுகளுடன் வாழும் குழந்தைகளோடு அதிக நேரம் வாழ்ந்து வரும் தீபாவிற்கு இங்குள்ள எல்லா குழந்தைகளும் தன் குழந்தைகளே. இல்லத்தரசிகளை குறைவாக மதிப்பிடும் இந்த சமூகத்தில் தீபா போன்றவர்கள் சேவையின் ஆலமரமாக இருந்து மற்றவர்களை உத்வேகப்படுத்துகிறார்கள்.
இந்திரா நூயி (Indira Nooyi)
உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலிக்கும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. பெப்ஸி & கோ தலைவராகவும், தலைமை அதிகாரியாகவும் இருப்பவர் சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திரா கல்வி மீது அதீத பற்று கொண்டவர். கல்லூரியில் படிக்கும் போதே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். குறிப்பாக தன்னுடைய ரிசப்ஷனிஸ்ட் பணியை எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு பல தொழில் அனுபவங்களை கற்றுக் கொண்டதாக கூறுவார். புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள தன்னை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
இவரின் உழைப்பும், விடாமுயற்சியும், வேகமும், புத்திசாலித்தனமும், தொலைநோக்குத் திறனும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனும், எளிமையும் இவரை பெப்ஸி & கோ தலைவராக உருமாற்றியது. திருமணத்திற்கு பிறகும் பல குடும்பத்தில் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு எந்த துறையிலும் பெண்களால் தலைவர்களாக முடியும் என்ற நம்பிக்கை பாதையை உருவாக்கி கொடுத்தார் இந்திரா. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். ஒரு கார்ப்பரேட் தலைவராக மட்டுமில்லாமல் குடும்ப தலைவியாகவும், தாயாகவும் தம் பணிகளை திறம்பட செய்யும் இந்திரா, லட்சியப் பாதையில் வெல்ல துடிக்கும் எல்லா பெண்களுக்கும் ஒரு வழிகாட்டி புத்தகம்.
ஜோதிகா(Jyotika)
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருப்பவர். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் உட்பட கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு சுமார் 10 வருடம் இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
ஒரு மனைவியாகவும், அம்மாகவும் தன்னுடைய பணியை முழு அர்ப்பணிப்போடு செய்ய இந்த இடைவேளையை எடுத்துக் கொண்டார். 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் நாயகியாக திரையில் ஒளிரத் தொடங்கினார். தமிழ் சினிமாவை பொறுத்த வரை திருமணம் ஆனாலே முக்கியத்துவம் குறைந்து விடும் நிலையில் 36 வயதிலும் ஒரு பக்குவமான, திறமையான நடிகையாக மீண்டும் கதாநாயகி கதாபத்திரங்களில் நடித்து தனக்கிருக்கும் புகழையும், பெயரையும் தக்க வைத்துக் கொண்டார் ஜோதிகா. 2 குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் சினிமாவில் பல சவால்களை திறம்பட கையாண்டு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மின்னுகிறார் ஜோதிகா.
அர்ச்சனா ராமசுந்தரம்(Archana Ramasundaram)
காவல் துறையிலும் பெண்கள் நினைத்தால் சாதிக்கலாம் என்பதற்கு சான்றாக விளங்குகிறார் அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ். 1980-ம் ஆண்டு பேட்ச்சில் பயிற்சி பெற்ற இவரை, முதல் போஸ்ட்டிங் அளித்து வரவேற்றது தமிழ்நாடு. அசிஸ்டென்ட் சூப்பரின்டெண்டன்ட் ஆஃப் போலீஸாக வேலூர் உட்பட பல நகரங்களில் பணியாற்றிய இவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இவரை அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றி சென்றது. காவல் துறையில் பெரும்பாலும் பல உயரிய பதவிகளில் ஆண்களே இருக்கும் நிலையில், அர்ச்சனா தன்னுடைய வலிமையாலும், துணிவாலும், அயராத உழைப்பாலும் ஆணாதிக்கம் நிறைந்த துறையிலும் தனக்கான சிறப்பிடத்தை பிடித்தவர். கடந்த 1999 முதல் 2006 வரை இணை இயக்குநர் பதவி வகித்த அர்ச்சனா, இப்பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார்.
மத்திய புலனாய்வுத் துறையின் உயரதிகாரியாகவும் பொறுப்பேற்றவர். பாரா மிலிட்டரி ஃபோர்ஸில் டைரக்டர் ஜெனரலாகப் பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்கிற வரலாற்றுச் சாதனையை, 2016-ம் ஆண்டு படைத்தவர். காவல் துறையில் மட்டுமில்லாமல் ஆணாதிக்கம் நிறந்த அத்தனை துறைகளிலும் சாதிக்க வழிகாட்டுகிறது அர்ச்சனா ராமசுந்தரத்தின் வாழ்க்கை அனுபவம்.
கே.பாலபாரதி(Kepalaparati)
அரசியல் என்பது ஆண்களுக்கானது என்பதை தகர்ர்த்து எரிந்து பெண்ணரசியலுக்கான ஒரு இடத்தை உருவாக்கியவர்களில் இவர் முக்கியமானவர். தன்னுடைய வலிமையாலும், துணிவாலும் ஆணாதிக்க எதிர்ப்பையும், வர்க்க போராட்டத்தையும் கையில் ஆயுதமாக எடுத்தவர் பாலபாரதி. தற்போது கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். மக்கள் பணியே மகேசன் பணி என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாக தன் வாழ்வின் ஒரு அங்கமாக மக்கள் பணியை இணைத்துக்கொண்டார். பல போராட்டங்கள் மூலம் சட்டமன்றத்தில் எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் இவரது உரைகள். அரசியலை பார்த்து ஒதுங்கும் ஆண்கள் கூட பாலபாரதியின் அர்ப்பணிப்பை கண்டு பெருமை கொள்கின்றனர். பெண்களால் வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமல்ல நாட்டின் பொறுப்புகளையும் எடுத்து செம்மையாக பணி செய்ய முடியும் என்பதற்கு சான்று பாலபாரதி.
டாக்டர் பிரியா ராமச்சந்திரன் (Dr. Priya Ramachandran)
புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷன் மூலம் இலவச சிகிச்சை அளித்து 15 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையில் இருக்கிறார் பிரியா ராமச்சந்திரன்.. சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, இங்கிலாந்தில் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்றவர். இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 140 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்துள்ளர்கள்.
ஒரு சிகிச்சைக்கு 10 லட்சம் வரை செலவாகும் இந்நிலையில் ஏழைக் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி அவர்களுக்கு புதிய வாழ்க்கையை பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய சூழலில் மருத்துவராக மட்டும் தன் பணியை முடித்துக் கொள்ளாமல் தன்னுடைய ஃபவுண்டேஷன் மூலம் எத்தனையோ குழந்தைகளில் வாழ்வை ஒளிர செய்கிறார் இந்த அன்புள்ளம் படைத்த சமூக சேவகி. மருத்துவராகவும், சமூக சேவகராகவும் பல பெண்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் பிரியா ராமச்சந்திரன்
பெண்ணின் சாதனையை போற்றி பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம். ஒவ்வொரு பெண்ணின் சாதனைக்கு பின்னும் எத்தனையோ போராட்டங்கள் நிறைந்திருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி ஒரு மனைவியாக, தாயாக, சாதனை பெண்ணாக ஒளிர்கிறார்கள். இதே போல் இன்னும் நிறைய பெண்கள் தங்களின் திறமையை உணர்ந்து சாதிக்க வேண்டும்.