Breaking News

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்!

கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கு வடகொரிய அரசு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறது. அதேபோல கொரோனா நேரத்தில் நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்று கூறி உயர் பதவியில் இருந்த ஒருவருக்கும் அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறேவற்றி இருக்கிறது.இந்தத் தகவல்கள் அனைத்தையும் தென் கொரியாவின் உளவு அமைப்பு ஒன்று உறுதிப்படுத்தி இருக்கிறது.  

வடகொரியா எப்போதும் மர்மமான நடைமுறைகளை கொண்ட ஒரு நாடாகவே இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பு உலகத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கடுமையான அழிவுகளை ஏற்படுத்தி இருந்தாலும் வடகொரியாவில் மட்டும் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை என அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் தென் கொரியாவின் எல்லையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக செய்தி வெளியாகியது. அதையொட்டி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டுடன் இருந்த அனைத்து எல்லைகளையும் இழுத்து மூடினார்.  

மேலும் தென்கொரிய எல்லையைத் தாண்டி யாரேனும் வடகொரியாவிற்குள் நுழைந்தால் எந்த விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். அதேபோல தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்கு வர முற்பட்ட கடற்பரை வீரர் ஒருவரை கடந்த செப்டம்பர் மாதம் வடகொரிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது. கொரோனா நேரத்திலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை வடகொரிய அதிபர் செய்து வருகிறார். இதனால் வடகொரிய அதிபர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.   

மேலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல கடுமையான விதிமுறைகளையும் கிம் ஜாங் உன் அமல் படுத்தி இருக்கிறாராம். அதில் தலைநகர் பியோங்யாங் நகரில் பொது முடக்கம், கடலில் மீன்பிடிக்க தடை போன்ற பல கடுமையான கட்டுப்பாடுகள் இன்றும் தொடருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.