Breaking News

43 சீனச் செயலிகளுக்கு அதிரடி தடை!

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளது. 

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் இந்தச் செலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜுன் 29 ஆம் தேதி இந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 59 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதில் டிக்டாக் போன்ற அதிக பயனாளர்களைக் கொண்ட செயலிகளும் இருந்தன. 



அதையடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மேலும் 118 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதில் பப்ஜி செயலியும் இருந்ததால் பல இளைஞர்கள் கடும் மன வருத்தம் அடைந்தனர். தற்போது மேலும் 43 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதலே இந்திய-சீன எல்லைப் பிரச்சனை கடும் சர்ச்சரவை ஏற்படுத்தி வருகிறது. அதையொட்டி மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.