Breaking News

ஒன்றிணைகின்றன தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தமிழ்த் தேசியக் கட்சிகள், எதிர்காலத்தில் தொடர்ச்சியாக செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றையும், மிக விரைவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் நோக்கில் வடக்கு, கிழக்கில் உள்ள 10 தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி முதலான 10 கட்சிகளே, இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன. 

திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த 26 ஆம் திகதி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டதை முன்னெடுத்தன. 

அத்துடன், கடந்த 28 ஆம் திகதி, வடக்கு, கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டத்தையும் நடத்தியிருந்தன. 

குறித்த கட்சிகளின் முன்னோக்கிய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றைய தினமும், யாழ்ப்பாணத்தில் கலற்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்து தலைவர்களையும் கொண்ட கூட்டம் ஒன்றை விரைவில் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.