Breaking News

கொரோனா பரிசோதனையால் மூளைக்கு ஆபத்து!

உலகளவில் அமெரிக்கா கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. எனவே, அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க பெண் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, சுவாசக் குழாய் கிழிந்து, மூளையில் இருக்கும் திரவம் மூக்கு வழியாக வழிந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு 40 வயது. தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மூளையில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

சைனஸால் பாதிக்கப்பட்டவர்களும், கபாலத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் மூக்கிற்கு பதிலாக வாய் வழியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்ற பிரச்சினைகளை பொதுமக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு கொரோனா பரிசோதனைக்கு பின் தலைவலி, வாந்தி, கழுத்து பிடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

இந்த பிரச்சினை தீர்க்காப்படாமல் போயிருந்தால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மூளை தொற்று ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.