பிஞ்சு குழந்தைகளுக்கு விஷம் வைத்த ஆசிரியருக்கு மரண தண்டனை!
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாங் யுன் என்ற ஆசிரியர் பள்ளிக் குழந்தைகளின் உணவில் விஷம் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு ஆசிரியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கப்படவிருந்த உணவில் சோடியம் நைட்ரேட்டை கலந்துவிட்டார் வாங் யுன்.
இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வாங் யுன் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மிகவும் கொடிய விஷமான சோடியம் நைட்ரேட் ரசாயன உரங்கள், வெடிமருந்துகள், வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகளவில் உட்கொண்டால் உடல் பிராண வாயுவை உறிஞ்சுவது தடை செய்யப்படும். ஆனால், பிஞ்சு குழந்தைகளுக்கு இக்கொடிய விஷத்தை ஆசிரியரே கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல வாங் யுன் 2017ஆம் ஆண்டில் அவரது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கணவருக்கும் உணவில் விஷம் வைத்திருக்கிறார். எனினும், மருத்துவ சிகிச்சையால் அவரது கணவர் உயிர்பிழைத்துவிட்டார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் வைத்த வழக்கு தொடர்பாக ஹெனான் மாகாண நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளுக்கு விஷம் வைத்த கொடுமையான செயலுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், வாங் யுன்னிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.