Breaking News

எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (03) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

எதிர்வரும் 08 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயற்திறன் அறிக்கை, மற்றும் வருட நடுப்பகுதி அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்து விவாதிக்கப்படவுள்ளன. 

8 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.30 வரை பாராளுமன்றம் கூடும். மறுநாள் 09 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் இராவு 7.30 வரையும் பாராளுமன்றம் கூடும். இதன்போது உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் கீழ் வரும் இரண்டு ஒழுங்கு விதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் 10 அறிவிப்புக்கள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் 03 ஒழுங்கு விதிகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்ட 06 யோசனைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 10 ஆம் திகதி காலை 10.30 முதல் முதல் இரவு 7.30 வரையும் பாராளுமன்றம் கூடவுள்ளது. 

இறுதிநாள் 11 ஆம் திகதி அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபக் கூற்று யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதற்காக அன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரர் தொண்டமான் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

(அரசாங்க தகவல் திணைக்களம்)