ஜப்பானில் ஹைஷென் புயலால் 70 லட்சம் மக்கள் நிற்கதி!
ஜப்பானில் ஹைஷென் புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் ககோஷிமா மற்றும் ஒக்கினாவா நகரங்களுக்கு இடையே மையம் கொண்டுள்ள ஹைஷென் புயல் காரணமாக மணிக்கு 252 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புயல் அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டின் தெற்குப் பகுதியில் கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
ஒகினாவா, ககோஷிமா, குமாமோடோ, மற்றும் நாகசாகி ஆகிய தென் மாகாணங்களில் ஒரு லட்சம் வீடுகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் கியுஷூ பிராந்தியத்தில் வாழும் 70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படடுள்ளனர்.
மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் அரசின் உத்தரவைத் தொடர்ந்து முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதனிடையே அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய பிரதமர் ஷின்சோ அபே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் ஹைஷென் புயல் இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து கியுஷுவின் மேற்கு கடற்கரையை அடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.