Breaking News

மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி!

மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு இன்றுஅறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 



அதனடிப்படையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவருக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் கடந்த தினம் அறிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே அவரது சட்டத்தரணியால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி அளிக்குமாறு கோரி குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 



2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.