Breaking News

நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை - நெஞ்சை உலுக்கும் மாணவியின் கடைசி நிமிட ஆடியோ!


நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில், மதுரையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னர் தனது குடும்பத்தினருக்காக மாணவி பேசி பதிவு செய்த உருக்கமான ஆடியோ, கேட்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. 

மதுரை தல்லாகுளம் 6ஆம் பட்டாலியன் காவல்குடியிருப்பில் வசித்துவருபவர் சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா அரசு பள்ளியில் படித்து 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார். இந்த ஆண்டு நிச்சயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தனியார் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார். 



நாளை நடைபெறவுள்ள நீட் தேர்விற்காக நேற்று இரவு தனது அறையில் மாணவி ஜோதி துர்கா படித்துகொண்டிருந்த நிலையில், பெற்றோர் தங்கள் அறையில் தூங்கியுள்ளனர். காலையில் மாணவியின் அறைக்கு தேநீர் கொடுக்க சென்றபோது, உள்ளே தாழ் போட்டிருந்தால், வலுக்கட்டாயமாக கதவை திறந்து பார்த்தபோது, மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா சடலமாகத் தொங்கியுள்ளார். தற்கொலைக்கு முன்னர் மாணவி 7 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளதோடு, பெற்றோருக்கும் சகோதரனுக்கும் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.  

கடிதத்திலும், தாம் நன்றாகப் படித்திருப்பதாகவும் ஆனால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை எனில், அது குடும்பத்தினர் அனைவருக்குமே ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும் என்றும் ஜோதி ஸ்ரீதுர்கா குறிப்பிட்டுள்ளார். மனஅழுத்தம் காரணமாக தனது மகள் இவ்வாறு செய்துகொண்டதாக, ஜோதி ஸ்ரீதுர்காவின் தந்தை முருகசுந்தரம் கண்ணீருடன் தெரிவித்தார். 



இதனிடையே, அரசு ராஜாஜி மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோரும், குடும்பத்தினரும் கதறி அழுத காட்சி உருக்குவதாக இருந்தது. 

சம்பவ இடத்தில் நீட் தேர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக அங்கு வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர்கள் எத்தகைய சவாலையும் மனஉறுதியோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கையே வாழ்க்கை என்றும் குறிப்பிட்டார்.