ஆஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான புதிய வழி தொடர்பில் பரிந்துரை!
கொரோனா பரவலினால் பழங்கள் மற்றும் காய்கறிகள் பிடுங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய பண்ணைகளில் அகதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை கொடுப்பது குறித்த பரிந்துரையொன்று முன்மொழியப்பட்டுள்ளதாக SMH ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.
Refugee Council of Australia முன்வைத்த இந்த பரிந்துரை தொடர்பில் குடிவரவு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்குழு ஆராய்ந்து வருகிறது.
வழக்கமாக இத்தகைய பண்ணை வேலைகளில் ஈடுபடவென ஆஸ்திரேலியா வரும் backpackers, கொரோனா பரவல் காரணமாக வரமுடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து ஆஸ்திரேலிய பண்ணைகளில் வேலைசெய்வதற்கு பெருமளவில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து தற்காலிக விசாவில்(TPV மற்றும் SHEV) உள்ள சுமார் 17 ஆயிரம் பேரை, மேற்படி பண்ணை வேலைக்கு உள்வாங்குவதன் மூலம், ஒரு வருடத்தில் அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவது அரசுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மேற்படி அகதிகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கும் என்று Refugee Council of Australia தெரிவித்துள்ளது.
நிரந்தர வதிவிட உரிமைக்கான பண்ணை வேலையை ஒரு வருடமாக முன்மொழிவது மிகக்குறைவானது என்றும் இரண்டு வருடமாக அறிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று மேற்படி நாடாளுமன்றக்குழுவில் அங்கம் வகிக்கும் அரசியல்தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சரிவில் விவசாயத்துறை மிக முக்கியமானது. அதனை தூக்கிநிறுத்துவதற்கு தற்காலிக விசாவிலுள்ள தொழில் தகுதிமிக்கவர்களை பயன்படுத்துவது அரசுக்கு பொருத்தமான தெரிவு என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.