ஆபரண உற்பத்தியாளர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14% வீத வருமான வரி மற்றும் 15% வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில் நீக்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் இதன் மூலம் வெளிக்கொணரப்படாத நிலை தோன்றியது.
2018ஆம் ஆண்டு தங்க இறக்குமதிக்கு 15% வீத வரி விதிக்கப்பட்டது. தங்க நகைகளின் விலை உயர்வடைவதற்கு இவ்வரி காரணமாக அமைந்தது. குறித்த வரியை உடனடியாக நீக்கிஇ இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழிலின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் (07) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகச் சந்தையில் இலங்கை இரத்தினக்கல்லின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முடியாமல் போனமை, அவை சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே முன்வைத்த 14 ஆலோசனைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நாட்டில் கண்டெடுக்கப்படாத உலகின் ஏனைய நாடுகளுக்குரிய விலை கூடிய இரத்தினக்கற்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் மற்றும் இரத்தினக்கல் கையிருப்பை பாதுகாத்து வருவதன் முக்கியத்துவம் பற்றியும் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டினார்.
இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் போது இடம்பெறுகின்ற தாமதங்களை தடுப்பதற்காக உரிய அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பிரதாய ரீதியாக தங்க நகைகளை உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கிகளினால் 4% வீத சலுகை வட்டி அடிப்படையி்ல் 10 இலட்சம் ரூபா கடன் வழங்குமாறு ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய இரத்தினக்கல் படிவுகளைக்கொண்ட பயிரிடப்படாத காணிகளை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு வழங்குவதற்கு தடையாக உள்ள விடயங்களை நீக்கி அகழ்வுக்காக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன. இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் சம்பிரதாயமாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்து வருகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் இரத்தினக்கல் ஆய்வு கூடத்தை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துதல் உட்பட இத்துறையின் மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)