தமிழ் தேசியக் கட்சிகளின் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவு!
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவுக்கு வந்தது.
யாழ். சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் குறித்த போராட்டம் இன்று (26) காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
திலீபன் உயிர்க்கொடை வழங்கிய நாளான இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திலீபனின் நினைவேந்தலை நடத்த தமிழர் தாயகத்தில் இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டு நீதிமன்றத் தடையும் பொலிஸாரால் பெறப்பட்டது.
இந் நிலையில் நினைவேந்தல்கள் நடத்துவது தமிழ் மக்களின் உரிமையாகும், அதனைத் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தன, எனினும் ஜனாதிபதி குறித்த கடிதத்திற்கு பதிலளிக்காத நிலையில் நினைவேந்தல் தடை நீடிக்கப்பட்டது.
அதனையடுத்து தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தியது.
போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
போராட்டத்தின் நிறைவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா சிறப்பு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.