விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் சாதாரணமாகக் கருதிவிட முடியாது - சுரேஷ்
“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலும் அச்சுறுத்தலும் அனைத்து தமிழ் மக்களுக்கும் விடுக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன், “அத்தகைய மிரட்டலையும் அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:
“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய க.வி. விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை தொடர்பாக சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதிகள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கண்டனங்களும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களும் கொலை அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாகவே தோன்றுகின்றது.
ஊடகங்களில் வெளிவந்த இவர்களது கருத்துக்களைக் கேட்கின்ற பொழுது, இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது. தமிழ் மொழி தொன்மையானது, இலங்கையில் தமிழ் மக்கள் ஆதிக்குடிகள் என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது ஜீரணிக்க முடியாத சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு கோருவதும், இந்த விடயங்களைச் சொன்னதற்காக அவரை ஒரு இனவாதி என்று முத்திரையிடுவதும், இவை அனைத்திற்கும் மேலாக, தமிழ் மக்களினது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த அமிர்தலிங்கத்திற்கும், பிரபாகரனுக்கும் நடந்த கதியே விக்னேஸ்வரனுக்கும் நடக்கும் என்று அச்சுறுத்துவதும், ஒரு ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்லக்கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் அல்ல.
ஜனாதிபதி தேர்தலில் வென்று அனுராதபுரத்திலுள்ள ரூவான்வெலிசாய என்ற பௌத்த ஆலயத்தில் ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்தபொழுது, தான் சிங்கள பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர்களது ஆணையை ஏற்றுச் செயற்படப்போவதாகவும் கூறியிருந்தார். அதனைப்போன்றே, திரு.விக்னேஸ்வரன் அவர்களும் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்கவும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒருமித்த நாட்டுக்குள் அவர்களுக்கான ஓர் சுயாட்சியை உருவாக்கவும் உழைப்பதற்கான ஆணையைப் பெற்றுள்ளார். அந்த வகையில், தமிழ் மக்களின் அந்த ஆணையை கௌரவிக்க வேண்டிய தேவை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏனைய தேசிய இனங்களை அழித்தொழிப்பதையோ அல்லது அவர்களை அடக்கி ஒடுக்குவதையோ ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இலங்கையின் வரலாறு என்பது பொய்யையும் புனைகதைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறதென்பதும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெளிவுபடுத்தப்படவேண்டும் எனவும் நாங்கள் விரும்புகின்றோம். அவ்வாறான தெளிவுதான் இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க வழிவகுக்கும் என்றும் கருதுகின்றோம்.
அந்த வகையில், ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதைவிடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்காக குரல்கொடுப்போரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே சிங்கள பௌத்த இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்திருக்கும் அரசும், அதற்கு ஒருபடி மேலாக இனவாதத்தைப் பேசினாலே தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் எதிர்க்கட்சியினரும் தொடர்ந்தும் தமிழின விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது இந்த நாட்டினுடைய சுபீட்சமான எதிர்காலத்திற்கும் இவர்கள் பேசுகின்ற அபிவிருத்திக்கும் ஒரு போதும் துணைபுரியாது.
ஜனாதிபதித் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ வெல்வதற்கு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருபவர்கள் தேர்தல் முடிவடைந்ததும் தமிழின விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பதும், சிங்கள இனவாதத்தைத் தூண்டுவதென்பதும் இந்த நாட்டில் ஒன்றும் புதிய விடயமல்ல. காலாதிகாலமாக மாறிமாறிவந்த சகல அரசாங்கங்களும் இதனையே செய்து வந்திருக்கின்றன. இவர்கள் சிங்கப்பூரைப்போல வரவிரும்பலாம், அல்லது கொரியாவைப்போல வர விரும்பலாம். ஆனால் இவர்களது இனவாத சிந்தனைகளும், இனவாத நடவடிக்கைகளும் இந்த நாட்டை ஒருபோதும் அத்தகைய நாடுகளாக மாற்றாது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் என்பது வெறுமனே விக்னேஸ்வரனுக்கு எதிரானது மாத்திரமல்ல. அவரது கொள்கையைப் பேசக்கூடிய அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட மிரட்டலாகவே நாங்கள் பார்க்கின்றோம். சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த மிரட்டல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலோ வெளியிலோ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனிகளாக இருப்பதானது அவர்கள் பேசுகின்ற தேசியத்திற்கும் அவர்கள் மக்களிடம் பெற்றுக்கொண்ட ஆணைக்கும் நேரெதிரான செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம்.
விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கும் அச்சுறுத்தல் என்பதனை ஒரு சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, சர்வதேச நாடாளுமன்ற அவைக்கும் அதேபோல் பொதுநலவாய நாடாளுமன்ற அவைக்கும் இந்த அச்சுறுத்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உரிய முறைப்பாடுகளை மேற்கொள்ளும்.”