விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம் - விக்கி
விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள விக்னேஸ்வரன், இதற்கு விடுதலைப் புலிகளை குறை சொல்வதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்றும் கூறிய சி.வி.விக்னேஸ்வரன், அவர்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும், இராணுவமே அவர்களை கொலை செய்தது எனவும், கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும், சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.