திலீபனை கொன்றது பிரபாகரனே! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
திலீபன் நினைவேந்தல் என்ற போர்வையில் மக்களை பகடைக்காய்களாக்கி தமிழ் தலைவர்கள் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள் என அமைச்சரும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பகடைக்காய்களாக வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு முனைகின்றனர். அதன் ஒரு அம்சமே திலீபனின் நினைவேந்தல் விவகாரம் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மக்கள் நம்பிக்கையை வென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், போன்ற தலைவர்கள் மட்டுமன்றி புளொட், டெலோ ஈபிடிபி என அவற்றின் தலைவர்களைக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகளே. திலீபனும் அவ்வாறு ஒருவரே. திலீபனுக்கும் அதற்கான தகுதி கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் ஒருவகையில் தண்ணீர் கேட்ட திலீபனுக்கு தாகம் தீர்க்காமல் அவரைக் கொன்றதும் பிரபாகரனே என்பதை மறந்துவிட்டு மக்கள் மீதான அக்கறையாக காட்டி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கின்றார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திலீபன் நினைவேந்தல் நிகழ்வு, அதுதொடர்பான நீதிமன்ற அறிவிப்பு மற்றும் அதுதொடர்பிலான தமிழ் கட்சிகளின் முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவர்களோடு இணைந்தவர்களும் ஒரே நோக்கத்துடனே செயற்படுகின்றனர். அவர்கள் ஒருபோதும் மக்கள் நலன், மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவில்லை. கடந்த காலங்களிலும் அவ்வாறுதான் செயற்பட்டனர். அவர்களது தேவை அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதே.
அதற்காக அவர்கள் இப்போதும் மீண்டும் தமிழ் மக்களை உசுப்பேற்றி அவர்களை பலிக்கடாக்களாக்கப் பார்க்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் நான் எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு யுத்தத்தில் இறந்தவர்களின் தினத்தை நினைவு கூருவது மற்றும் அவர்களுக்கான சமய சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தேன்.
அதன்போதுஇந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எவரும் பங்கேற்காமல் ஓடி ஒளிந்து கொண்டனர். என்னுடைய பிரேரணையை வழிமொழிந்ததும் கூட வேறு ஒரு கட்சி எம்பி தான். அதில் தனியே நான் எதையும் செய்ய முடியாமற்போனது என்பதை குறிப்பிட வேண்டும். அவ்வாறானவர்களே இப்போது இவ்வாறு செயல்படுகின்றனர்.
தமது சுயலாப அரசியலுக்காக மீண்டும் போராட்டம் என எதையாவது தொடங்கி மக்களை உசுப்பேத்தி மக்களைப் பலி கொடுக்கப் பார்க்கின்றனர். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.