ராஜஸ்தான் அணி IPL கோப்பையை வெல்லும் - ஷேன் வார்ன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தார். இவரின் திறையான ஆட்டத்தைப் பார்த்த ஷேன் வார்ன், இவரை ஏன் இந்திய அணியில் எடுப்பதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
25 வயதாகும் சஞ்சு சாம்சன் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்ஸ்டாகிரம் பக்கத்திற்கு ஷேன் வார்ன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், சாம்சன் அற்புதமான வீரர். நீண்ட காலமாக அவரின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். பந்துகளைச் சிறப்பாக எதிர்கொள்கிறார். இருப்பினும், இந்திய அணியில் இவருக்கு ஏன் இடம் கிடைப்பதில்லை? என பேசினார்.
“சஞ்சு சாம்சன், துடிப்பான வீரர். எதிர்காலத்தில் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுப்பார் என நான் பல வருடங்களுக்கு முன்பே தெரிவித்தேன். பேட்டிங்கில் அசத்தி வரும் இவரை, இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
“சாம்சனை குறைசொல்ல ஒரு காரணமும் இல்லை. இவர் ஆடும் ஷாட்கள், பந்தை எதிர்கொள்ளும் திறன் அனைத்திலும் தலைசிறந்தவராக திகழ்கிறார். இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்குக் கோப்பை பெற்றுத்தருவார் என நம்புகிறேன். அதேபோல், இந்திய அணியிலும் இடம்பெறுவார் என்றும் நம்புகிறேன்” என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 19 பந்துகளில் சாம்சன் அரை சதம் கடந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் குவித்தது. சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.