திருகோணமலையில் ஆயிரம் ஏக்கர் வயலுக்குள் விவசாயிகள் செல்லத் தடை? - விவசாயிகளை மிரட்டிய பிக்கு
குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ்மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் ஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவங்கை,
பட்டாணிபாதி, பாவலங் கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் புதைபொருள் சார்ந்த இடங்கள் என்பதாகக் கூறி இந்த முறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர் இறங்கக் கூடாது. இறங்கினால் அனைவரையும் சிரையில் அடைப்பேன் என்று அரிசிமலைப் பிக்கு கூட்டம் போட்டு விவசாயிகளை மிரட்டியுள்ளார்.
மிரட்டிய பிக்கு சனாதிபதியால் நிறுவப்பட்ட கிழக்குத் தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் ஆவார்.
பிக்குவின் மிரட்டலால் அச்சமடைந்த வயல் சொந்தக்காரர் தமது வயல்களுக்குச் செல்லாமல் உள்ளனர்.
விவசாயிகள் வயல் செய்வதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு சந்திப்பு திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மறறும் அவரது செயலாளர் க.ச.குகதாசன் ஆகியோருக்கிடையே நேற்றைய தினம் (02-09-2020) நடைபெற்றது.
எதிர்வரும் புதன் கிழமை குச்சவெளிப் பிரதேச செயலாளர் பணிமனையில் அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் நடத்துவதாகவும் அதில் இச்சிக்கலுக்குத் தீர்வு காணப்படுவதாகவும் முடிவுசெய்யப்பட்டது.
இதில் தீர்வுகாண முடியாது போனால் நீதி மன்றம் செல்வதற்கான ஆயத்தங்கள் சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்திப்பின் போது திரு.க.ச. குகதாசன் கூறினார்.