குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பிரதமர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!
அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதோடு, பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளின்போது குறிப்பிடத்தக்க தரப்பினரை விசேடமாக கருத்தி கொண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 'சபிரி கமக்' (வளமான கிராமம்) வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 28 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14021 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் ரூபாய் 2 மில்லியன் வீதம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, பிரதமரின் ஆலோசனைக்கேற்ப கிராமிய சனசமூக குழுக்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட கீழ்காணும் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
- கிராம வீதிகள், படிகள், வடிகால்கள், சிறிய பாலங்கள், பக்க வடிகால் என்பவற்றை மேம்படுத்துதல்
- விவசாய பொருட்கள் உற்பத்திக்கு தேவையான களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல்
- கிராம மட்டத்தில் பொருளாதார மையங்கள், வாராந்திர சந்தைகள் மற்றும் சந்தை இடங்களின் மேம்பாடு
- சிறிய குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள், குளங்கள், விவசாய கிணறுகள் புனரமைப்பு
- சமூக குடிநீர் விநியோக திட்டங்கள்
- கிராமப்புற மருத்துவ மையங்களை நவீனமயப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
- பாடசாலைகளுக்கான மின்சாரம், நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்
- வனவிலங்குகளினால் மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இல்லாது செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான திட்டங்கள்
குறித்த சந்தர்ப்பத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், அரச வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.