'சூது கவ்வும்' பட பாணியில் சொந்த கடையிலேயே 14 கிலோ நகைகளைத் திருடிய மகன்!
சென்னை, யானைகவுனியில் உள்ள நகைக்கடை ஒன்றில், கடந்த மாதம் 14 கிலோ தங்கம் திருடு போன வழக்கில், கடை உரிமையாளரின் மகனே திட்டமிட்டு நகைகளைத் திருடியுள்ளதைப் போலீசார் கண்டறிந்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சொந்தக் கடையிலேயே கைவரிசையைக் காட்டியது போலிசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை, யானைகவுனியில் என்.எஸ்.சி போஸ் சாலை வீரப்பன் தெருவில் ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து, கடந்த இருபது ஆண்டுகளாக ;சங்கம் கிராஃப்ட்’ எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இருவரும் இணைந்து தங்க நகைகளை டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
தங்கை நகை டிசைன்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டி அவற்றை மீண்டும் லாக்கரில் வைத்துவிடுவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் மாதம் 21 - ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தங்க நகை டிசைன்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்டிவிட்டு லாக்கரில் பூட்டி வைத்தனர். அதன்பிறகு, 25 - ம் தேதி, செவ்வாய்க் கிழமையன்று நகை டிசைன்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட லாக்கரைத் திறந்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 14 கிலோ தங்கம் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியான ராஜ்குமாரும், சுபாஷ் போத்ராவும் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு, கடையின் பூட்டு மற்றும் லாக்கர் உடைக்கப்படாமல் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது போலீசாருக்கு நகைக்கடை ஊழியர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களின் குடும்பத்தினர் மேல் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா நகைகளைத் திருடியது தெரியவந்தது. ஹரஸ் போத்ராவைக் கைதுசெய்த போலீசார் வியாபாரிகளுக்கான லாக்கரில் பதுக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளையும், கடைக்குள் பதுக்கப்பட்டிருந்த 2 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஹர்ஷ் போத்ராவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் “நான் நடத்தி வந்த ஆன்லைன் டிரேடிங் தொழிலில் எனக்குப் பெரிய அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனை ஈடுசெய்யவே சொந்தக் கடையில் திருடினேன். தந்தை வீட்டுக்கு எடுத்த வந்த லாக்கர் சாவியை எடுத்து நகைகளைத் திருடினேன்” என்று வாக்குமூலம் அளித்தார் ஹர்ஷ் போத்ரா. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹர்ஷ் போத்ரா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.