விரைவில் கிடைக்குமா கொரோனா தடுப்பூசி ?
பல மருந்து நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள போதிலும், சில நிறுவனங்கள் இறுதி கட்டமான 3ஆவது நிலையை எட்டியுள்ளன. இறுதி கட்டத்தில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடத்தப்படுகிறது.
பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு - அஸ்டிரா ஜெனிகா நிறுவனங்கள், அமெரிக்காவில் மொடர்னா நிறுவனம், ஜெர்மனியில் பயோன்டெக் மற்றும் பைசல் நிறுவனங்கள் 3ஆவது கட்ட சோதனையில் இறங்கி விட்டன. அந்த நிறுவனங்களின் பரிசோதனையில் தடுப்பு மருந்து மூலம் ஆன்டிபாடிஸ் மற்றும் டி செல்ஸ் உருவாகி நல்ல பலன் கொடுத்திருப்பது தெரியவந்தது.
பிரிட்டன் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசி சோதனை அடுத்த ஆண்டு ஜூலை மாதமும், அமெரிக்க நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி சோதனை 2022 ஆம் ஆண்டு அக்டோபரிலும், ஜெர்மனி நிறுவனங்களின் தடுப்பூசி சோதனை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சி முதல் கட்டத்திலேயே இருக்கிறது. எப்போது சோதனை முடியும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
மிக முக்கியமானதாக கருதப்படும் மூன்றாவது கட்ட பரிசோதனையில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். 18 முதல் 85 வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்படும்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து சோதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. அதில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3வது நிலையிலும் நல்ல பலன் கிடைத்து விட்டால், அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தடுப்பூசி கொண்டு வரப்படும்.