England vs Ireland: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - பேர்ஸ்டோ அபாரம்!
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து 212 ரன்களை எடுத்தது. எளிய இலக்கை துரத்திக் கொண்டு சென்ற இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கிரேத் டென்லி 12 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் டக்-அவுட் ஆனார். ஸ்டெர்லிங் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஆன்டே பால்பிர்னி அணிக்கு கை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 15 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அயர்லாந்து அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும், மனம் தளராமல் விளையாடிய ஹேரி டெக்டர்(28 ரன்கள்) மற்றும் லோர்கன் டக்கர்(21 ரன்கள்) ஆகியோர் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து ஆடினர். முதல் போட்டியில் அரை சதம் விளாசிய கார்டிஸ் கேம்பர் இப்போட்டியிலும் 68 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அறிமுகமான முதல் இரண்டு போட்டிகளிலும் அரை சதம் கடந்த முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சிமி சிங் தனது பங்கிற்கு 25 ரன்கள் சேர்த்தார். ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட அயர்லாந்து அணியால் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணியின் அடில் ரஷீத் 3 விக்கெட்களை சாய்த்தார். டேவிட் வல்லி, சகிப் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வலுசேர்த்தனர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரிலேயே ஜாசன் ராய் விக்கெட்டை இழந்தது.
ஜேம்ஸ் வின்ஸ் 16 ரன்களும், டாம் பன்டன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, கேப்டன் இயான் மோர்கன், மொயின் அலி ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் என்று இருந்த நிலையில், அயர்லாந்து அணியின் சாமர்த்தியமான பந்து வீச்சால் 137 ரன்களை கடப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.
கடைசியில், சாம் பில்லிங்ஸ் 46 ரன்கள் எடுத்தும், டேவிட் வில்லி 47 ரன்கள் எடுத்தும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 41 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களின் உதவியுடன் 82 ரன்கள் விளாசிய ஜானி பேர்ஸ்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டு வெற்றிகள் மூலம் சூப்பர் லீக் தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி 20 புள்ளிகள் பெற்றுள்ளது.