பணத்தைத் திருடும் வைரசுடன் விற்பனைக்கு வரும் சீன ஸ்மார்ட் போன்கள் - மக்களே கவனம்!
சிறந்த அம்சங்கள் மற்றும் மலிவான விலைக்குப் பெயர் போனவை சீன மொபைல் போன்கள். அதனால், ரியல்மி, ரெட் மி, ஹூவாய் உள்ளிட்ட சீனத் தயாரிப்பு ஸ்மார்ட் போன்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஆனாலும், சீனாவின் ஹூவாய் போன்கள் மற்றும் சீன செயலிகள் தகவல்களைத் திருடுகின்றன எனும் குற்றச்சாட்டு நெடு நாள்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தரவுகளையும். பணத்தையும் திருடும் வகையில் மால்வேர்கள் நிறுவப்பட்ட சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரான்ஷன் ஹோல்டிங்க்ஸ் என்ற சீன நிறுவனத்தின் மொபைல் பிராண்டான டெக்னோW2 என்ற போனில் xHelper,Triada என்ற இரண்டு வகையான மால்வேர்கள் (வைரஸ்கள்) நிறுவப்பட்டு ஆசியா (இந்தியா) மற்றும் ஆப்பிரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆய்வு நடத்திய Secure-D என்ற மோசடிகளைக் கண்டறியும் நிறுவனம் டெக்னோ போன்களில் மால்வேர் இருப்பதைக் கண்டறிந்து உறுதிப் படுத்தியுள்ளது. மொபைல் பேங்கிங் தகவல்கள், பாஸ்வேர்டு, கட்டண சேவைகள் உள்ளிட்ட தகவல்களைத் திருடும் வகையில் ரகசியமாக இந்த வகை மால்வேர்கள் மொபைலில் நிறுவப்பட்டுள்ளன.
மொபைல் போன்களில் மால்வேர்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள டிரான்ஷன் நிறுவனம், “உதிரி பாகங்களை சப்ளை செய்தவர்களின் கைங்கரியமாக இருக்கலாம். மொபைல் போன்களில் மால்வேர்களை நிறுவுவதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை” என்று கூறியுள்ளது.
டெக்னோ போன்களில் உள்ள xHelper,Triada மால்வேர்கள் அல்காடெல் மொபைல்களில் இருப்பதாகவும் Secure-D கூறியுள்ளது. அல்காடெல் மொபைல் போன்கள் பிரேசில், மியான்மர் நாடுகளில் பிரபலமாக விற்கப்பட்டாலும் இந்தியாவில் விற்பனையாவதில்லை என்பது சற்றே ஆறுதலான செய்தி. ஆனால், டெக்னோ போன்கள் இந்தியாவில் மலிவு விலையில் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது!