Breaking News

அபிவிருத்தியை விட எமது சமுதாயத்தின் பாதுகாப்பு தான் முக்கியம் - றிசாட்

எமக்கு அபிவிருத்தியை விட எமது சமுதாயத்தின் தன்மானம், எமது சமுதாயத்தின் இருப்பு, எமது சமுதாயத்தின் பாதுகாப்பு, எமது வரலாற்று சந்ததியின் உடைய எதிர்காலம் தான் முக்கியம் என்பதை முதலிலே நாங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 

ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஸ்டங்களை கொடுக்க முடியுமோ அவ்வளவு கஸ்டங்களை இந்த தேர்தலில் எனக்கு தந்தார்கள். 4 மாதத்திற்கு முன்னர் என்னுடைய சகோதரரை கைது செய்தார்கள். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரை அடைத்து வைத்துள்ளார்கள். 3 மாதம் முடிய மீண்டும் 3 மாதம் அடைத்துள்ளார்கள். என் மீது இல்லாத பொல்லாத நினைத்தும் கூட பார்க்காத குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிஐடிக்கு வர சொன்னார்கள். குடும்பத்தினரை இம்சைப்படுத்தினார்கள். 

வன்னி மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அரசாங்க தரப்பில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தலுக்கு மட்டுமே வந்தார்கள். பல கோடிகளை கொட்டினார்கள். என்மீதான இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். ஆனால் மக்கள் அதனை நிராகரித்து எம்மை தெரிவு செய்தார்கள். இந்த ஒற்றுமையை பாதுக்காக்க வேண்டும். எதிர்கட்சியில் இருந்து இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் வெல்லக் கூட முடியாது என்றார்கள். இவற்றை தாண்டித் தான் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள். 

ஒரு போதும் உங்களுடைய தியாகம், முயற்சி, நம்பிக்கை வீண்போகாது. வீண் போக விடவும் மாட்டேன். கடந்த இரண்டு தசாப்தமாக அரசியலில் நாம் இருக்கின்றோம். மிக அமைதியாக நோக்க மிட்டுக் கொண்டிருக்கின்றோம். எமக்கு அபிவிருத்தியை விட எமது சமுதாயத்தின் தன்மானம், எமது சமுதாயத்தின் இருப்பு, எமது சமுதாயத்தின் பாதுகாப்பு, எமது வரலாற்று சந்ததியினருடைய எதிர்காலம் தான் முக்கியம் என்பதை முதலிலே நாங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை பார்க்க வேண்டும். எனவே யாரும் கலங்க தேவையில்லை. அவற்றை அடைவதற்கான அரசியல் பாதையை வகுத்து செயற்படுவோம். 

எமக்கு தேசியப்பட்டியில் ஒரு ஆசனம் தருவதாக சஜித் பிரேமதாச அணியினர் கூறியிருந்தார்கள். இருந்தாலும் கடைசி நேரத்தில் அவர்களுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் எம்மை அழைத்து எமது கட்சி ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விட்டுத் தாருங்கள் என்றார்கள். இதனால் அதில் இருந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து நாம் மென்மைப் போக்கை கடைப்பிடடித்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த சிறுபான்மை சமூகம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய தேவையை உணர்கின்றேன். அவ்வாறு பயணிக்கும் போது தான் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் எனத் தெரிவித்தார். 

இந் நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முஸ்ரப், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ஆகியோரும், கட்சி ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.