யாழில் நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆளுனரிடம் மனு கையளிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுனரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதி பிரச்சனை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான பிரச்சனை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்த மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவணம் செய்யுமாறு கோரி மனுவினை கையளித்துள்ளனர் எனினும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலைமையில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அந்த திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு இன்றி வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதார்கள் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னாள் ஆரம்பமான போராட்டம் பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற 51 ஆயிரத்து 153 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் இன்று வழங்கப்படவுள்ளது. மேலும் 9 ஆயிரத்து 945 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களின் கீழ் ஊழியர் சேமலாபநிதியத்தில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட சில காரணங்களால் குறித்த பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

எனினும் மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.