பெரும் இழுபறியில் முடிந்த கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம்! - அசிங்கப்பட்டார் சம்பந்தர்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது.
செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் (29) வவுனியாவில் நடந்தது.
சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சசி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஈடுபட்டு, தேசியப்பட்டியல் நியமனத்தை கலையரசனிற்கு வழங்கினார்.
தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குபவர்களின் பெயர் பட்டியில் பெண் பிரதிநிதித்துவம், அம்பாறை பிரதிநிதித்துவம் ஆகியவற்றை மாவை சேனாதிராசாவும் வைத்திருந்த நிலையில் இரகசிய சதி நடவடிக்கையினால் அதிர்ச்சியடைந்திருந்தார்.
இந்த நிலையில், செயலாளரின் சதி நடவடிக்கைக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தீர்மானத்தை வாசித்தார். இதன்போது கருத்த தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், மத்தியகுழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த பிரேரணை இடம்பெறவில்லை. நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத பிரேரணையை நிறைவேற்றுவது சட்டவிரோதமானது, செயலாளர் இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லலாம் என தெரிவித்து, தனது பின்னணியில் இயங்கிய செயலாளரை காப்பாற்றினார்.
இதையடுத்து, செயலாளர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் பொதுச்சபையை கூட்டி நிறைவேற்றுவதென முடிவானது.
அதேநேரம், தேசியப்பட்டியல் விவகாரத்தில் செயலாளர் நடந்து கொண்டது ஒரு சதி நடவடிக்கைக்கு ஒத்தது, அது சட்டவிரோதமானது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், அம்பாறைக்கு நியமனம் வழங்கியதை யாரும் எதிர்க்கவில்லை. அந்த நியமனத்தை அனைவரும் ஆதரித்தனர். எனினும், நடந்து கொண்ட முறை சட்டவிரோதமானது.
செயலாளரை காப்பாற்ற இரா.சம்பந்தனும் முயன்றார். “செயலாளர் கிழக்கை சேர்ந்தவர். இந்த தீர்மானத்தை வடக்கிலுள்ளவர்கள் கொண்டு வருகிறீர்கள். இது பிரதேசவாதத்தை தூண்டலாம். அதனால் இதை இப்போதைக்கு நிறைவேற்றாமல் தவிருங்கள்“ என இரா.சம்பந்தன் கேட்டார்.
இது முழு மத்தியகுழுவையும் கொதிப்படைய வைத்தது. இது பிரதேசவாதமல்ல. கட்சி ஒழுக்கம் சார்ந்தது. இப்படி கீழ்த்தரமாக சிந்திக்காதீர்கள். முதலில் உங்கள் கருத்தை வாபஸ் பெறுங்கள் என எல்லோரும் கூட்டாக வலியுறுத்த, வெலவெலத்து போனார் சம்பந்தன்.
ஒரு கட்டத்தில், இளைஞரணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன்- “ஐயா நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் தலைவர். நாங்கள் உங்கள் வயதிற்கு மரியாதை தந்து பேசாமலிருந்தால் அனைத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இது தமிழ் அரசு கட்சி பிரச்சனை. நீங்கள் பேசாமலிருங்கள். மைக்கை பக்கத்திலுள்ள தமிழ் அரசு கட்சி தலைவர் மாவையிடம் கொடுங்கள்“ என கறாராக சொல்ல, சம்பந்தன் மேலும் வெலவெலத்தார்.
கூட்டத்தினர் ஏகோதித்து இதை ஆமோதித்தனர்.
மன்னார் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு ஒரேயொரு காரணம் இரா.சம்பந்தன்தான் என நேரடியாக குற்றம்சாட்டி, சம்பந்தன் மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். அத்துடன், கட்சியின் செயலாளரை மாற்றாமல், யாரும் கட்சிக்கூட்டம் என மன்னார் பக்கமே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சுமந்திரன் பேசும்போது, கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், அவரது உதவியாளர் பிரதாப், வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், அவரது சகோதரன் குணாளன் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.
அப்போது ஒருவர் குறுக்கிட்டு- அப்படியானால் சுமந்திரன் குரூப்பை வைத்து தனியே கட்சி நடத்தப் போகிறீர்களா என கேட்டார்.
பின்னர் சரவணபவன் பேசும்போது- சுமந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன், உதயன் பத்திரிகை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்களை – அது எந்த கட்சி சார்ந்தவர்கள் என்றாலும்- பத்திரிகை விமர்சிக்கும். உதயன் பத்திரிகை விமர்சிக்கிறது என யாராவது தமிழ் தேசிய விரோதிகள் குற்றச்சாட்டு முன்வைத்தால், அதை நாம் கணக்கிலேயே எடுக்க மாட்டோம் என சுமந்திரனிற்கு பதிலடி கொடுத்தார்.
செயலாளர் எழுந்து, வழக்கம் போல ஒரு குட்டிக்கதை, திருக்குறளில் அப்படி சொல்லப்பட்டுள்ளது என பேச ஆரம்பிக்க, அவரை ஒருமையில் சிலர் அழைத்து, “உமது கதையை நாம் கேட்க வரவில்லை. உம் மீது நடவடிக்கையெடுக்கவே கூட்டம். சத்தம் போடாமல் இரும்“ என சத்தமிட்டனர். செயலாளர் கப்சிப் என உட்கார்ந்தார்.
கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரென, செயலாளரை நீக்க ஆதரவளிப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். மேடையில் இருந்தவர்கள் தவிர, அரங்கிலிருந்தவர்களில் சுமந்திரன், அவரால் நியமனம் வழங்கப்பட்ட சாணக்கியன், குருநாதன் ஆகிய மூவரையும் தவிர மிகுதி அனைவரும் கையை உயர்த்தினர்.
கே.வி.தவராசா பேசும்போது- சுமந்திரன் காலையில் ஒன்று, மதியத்தில் ஒன்று, மாலையில் ஒன்று என மாற்றி மாற்றி பேசுபவர், அவரது சிங்கள நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி, அது தவறானது, அதனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் விளக்கத்தில் திரிவுபடுத்தி பொதுமக்களிற்கு விளக்கமளித்ததையும் சுட்டிக்காட்டினார்.
மாவை சேனாதிராசா பேசும்போது- தமிழ் தேசியத்தை வீழ்த்த தெற்கு பின்னணியில் இயங்கும் வித்தியாதரன் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டு, தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டினார். அதில் சுமந்திரன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.
இதை சுமந்திரன் மறுத்தார். தனக்கும் அந்த பத்திரிகைக்கும் தொடர்பில்லையென்றார்.
அதேபோல சுமந்திரனின் நெருங்கிய உறவினரும், அமெரிக்கன் மிசன் திருச்சபையை சேர்ந்தவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அண்மையில் தவறான தகவல்களுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அனேக தகவல் தவறுகள் இருந்தன. இதை பததிரிகை ஆதாரத்துடன் கூட்டத்தில் காண்பித்த மாவை, இப்படியான தவறான தகவல்களை கொடுத்து, தன்னைப்பற்றிய இமேஜை உருவாக்க சுமந்திரனே முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
டி.பி.எஸ் தனது நெருங்கிய உறவினர் என்பதை ஏற்றுக்கொண்ட சுமந்திரன், அவர் கட்டுரை எழுதியதற்கும் தனக்கும் தொடர்பில்லையென்றார்.
மொத்தத்தின் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லையென்ற போதும், மாவை அணி மத்தியகுழுவிலும், கட்சிக்குள்ளும் தமது பலத்தை இன்று நிரூபித்துள்ளனர்.
கூட்டத்தின் முடிவில் வழக்கம் போல மாவை ஒரு எச்சரிக்கையை விடுத்தார். கூட்டம் முடிந்த உடனேயே தமிழ்பக்கத்தில் உள்ளது உள்ளபடி வந்து விடுகிறது. யாரும் ஊடகங்களிற்கு செய்தி வழங்கக்கூடாது. வழங்குபவர் கண்டுபிடிக்கப்பட்டால் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்றார்.