Breaking News

மணிவண்ணன் விவகாரம் கொள்கை சார்ந்த பிரச்சினை, மத்திய குழு இறுதி முடிவை எடுக்கும் - கஜேந்திரகுமார்


“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் விவகாரம் கொள்கை சார்ந்த ஒரு பிரச்சினையாகும். இது குறித்து மணிவண்ணனுக்கு நாம் அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதனை மத்திய குழு பரிசீலனை செய்து தமது முடிவை அறிவிக்கும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது எமது முடிவு. அதன் மூலமாக பேரம் பேச முடியும் என்பது எமது நிலைப்பாடு. எமது கொள்கைகளை அவர் ஏற்கவில்லையெனில், அவர் அதற்கு ஏற்ற ஒரு கட்சியில் இணைந்துகொள்ளலாம். 

கொள்கை விடயங்களில் நாம் விட்டுக்கொடுக்கப்போவதில்லை” எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். “இது தொடர்பில் அவருக்கு நாம் அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதனை எமது மத்தியகுழு இரு நாட்களுக்கு முன்னர் பரிசீலனை செய்யவிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதனைச் செய்ய முடியவில்லை. விரைவில் அதனையிட்டு ஆராய்ந்து எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.