தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்க தயார் - மணிவண்ணன்
“இனத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு எத்தகைய விட்டுக்கொடுப்பையும் செய்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இருக்கின்றேன்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வீ.மணிவண்ணன் இன்று அறிவித்திருக்கின்றார்.
யாழ். ஊடக அமையத்தில் சற்று முன்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த மணிவண்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தவிருந்த போது, தலைமையகம் மூடப்பட்டதால், அதனை ஒத்திவைத்த மணிவண்ணன், இன்று காலை 11.30 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியாளர்களைச் சந்தித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அவர், “இனத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு எத்தகைய விட்டுக்கொடுப்பையும் செய்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இருக்கின்றேன்.
கஜேந்திரகுமாருடன் இணைந்து நாம் ஒரு நீண்ட பயணத்தைச் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
கடந்த10 வருடங்களாக கஜேந்திரகுமாருடன் எனக்கு இருந்த உறவு மிகவும் ஆழமானது. இனிமையானது. குடும்ப உறவினர்கள் போல நாம் பழகியிருக்கின்றோம். இந்த உறவு வருங்காலங்களிலும் தொடரும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.
இனத்தின் நலனுக்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் நான் தயார். தொடர்ந்தும் கட்சியை ஜனநாயக ரீதியாக வலுப்படுத்தவும், நிறுவன மயப்படுத்தவும், வடக்கு கிழக்கில் மக்கள் மயமான அமைப்பாக்கும் இலக்குடனும், அந்த மக்களுடைய ஆதரவைப் பெற்ற பலமான கட்சியாக கட்டியெழுப்புதற்கான பயணத்தில் கஜேந்திரகுமாருடன் இணைந்து பயணிக்க நான் தயாராகவுள்ளேன்.”