மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் உயிரிழப்பு!
மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடம் இருந்து வேளாண்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் சிக்கி வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா, 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சம்பவ தினமான நேற்று இரவு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வயல் பகுதியில் யானைக்காக சட்டவிரோதமாக மின்சார வேலியை வோளாண்மை உரிமையாளர்கள் அமைத்துள்ளனர்.
இந்த மின்சார வேலியில் சிக்குண்டு இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.