Breaking News

பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பை இலங்கையர்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்!

* கடினமான காலங்களில் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை இலங்கையர்கள் என்ற வகையில் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என தெரிவிப்பு.

* மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த வேளையிலும் பாகிஸ்தான் இலங்கையின் பக்கம் சார்ந்தே இருந்ததாக தெரிவிப்பு.

* அடுத்த வருடம் முதல் இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளுக்கு மேலதிக சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளது.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

யுத்த சமயத்தில் இலங்கை முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின் போது பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டிய பாதுகப்பு செயலாளர், புலிகளை தோற்கடிக்கும் கடுமையான போர் நடவடிக்கையின் போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் வலுவாக காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக சுமத்திய சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை ஒருபோதும் மறக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

´ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்´ எனும் கூற்றுக்கு அமைய இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்த சமயத்தில் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பங்களிப்பினை இலங்கையர்கள் என்ற வகையில் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்´ என அவர் வலியுறுத்தினார்.

இலங்கையும் பாகிஸ்தானும் தமது உறவுகளை மிகவும் ஆரோக்கியமாக பேணி வருவதாகவும் இந்த உறவுகள் அன்று முதல் இன்று வரை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ´நூற்றாண்டு பதக்கங்கள்´ வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று காலை மாகொல, படலந்தவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் வரவேற்புரை, 2015 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் மாணவ அதிகாரியாக பயிற்சி பெற்றவரும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகருமான கேர்ணல் சஜ்ஜாத் அலியினால் நிகழ்த்தப்பட்டது.

குவெட்டா நகரில் உள்ள பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்நிகழ்வின்போது ´நூற்றாண்டு பதக்கங்கள்´ வழங்கிவைக்கப்பட்டன.

பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற இலங்கை பட்டதாரிகளில், 10 அதிகாரிகள் தற்போதும் சேவையில் உள்ளதுடன் ஏனைய 27 அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்த பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் பழைய மாணவ அதிகாரிகளில் ஒருவரான பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக்கினால் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் குணரத்ன, பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கற்கை நெறியை தொடர்ந்த வேளையில் தற்போதைய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் குவெட்டா பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கட்டளை பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

1960-2005 வரை பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை அதிகாரிகளுக்கு இந்த பதக்கங்களை பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள அதேசமயம், பதக்கங்கள் பெற்றவர்கள் சார்பில் இலங்கை அரசாங்கம், பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மற்றும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த உயர் ஸ்தானிகராலயம் அதிகாரிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.

1905 ஆம் ஆண்டில் குவெட்டாவில் ஸ்தாபிக்கப்பட்ட பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரி பாகிஸ்தான் இராணுவத்தின் பழமைவாய்ந்ததும் பெருமைக்குரியதுமான ஒரு கல்லூரி ஆகும்.

பீல்ட் மார்ஷல்ஸ்களான ஆர்க்கி போல்ட் வேவல், பெர்னார்ட் மோண்ட்கோமெரி, சர் கிளாட் ஆச்சின்லெக் மற்றும் வில்லியம் ஸ்லிம் (இங்கிலாந்து), பிளார்னி (அவுஸ்திரேலியா), அயூப் கான் (பாகிஸ்தான்) மற்றும் சாம் மானேக்ஷோ (இந்தியா) உள்ளிட்ட பல புகழ்பெற்ற இராணுவ இந்தக் கல்லூரியில் கற்று வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக இராணுவ மரபுகளுக்கு அமைய 1960 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்த கல்லூரியில் பயில சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை குறித்த பாதுகாப்பு கல்லூரியில் பயின்ற இலங்கை மாணவர்கள் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை நிறைவு செய்ய தமது பங்களிப்பை வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

வருடாந்தம் வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு அமைய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு வந்ததாகவும் எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் உள்ள பாதுகாப்பு கல்லூரிகளில் மேலும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும், இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.