போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பேன் - ஜனாதிபதி
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்று (30) கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, களனி ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
வேட்பாளர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்ட “பத்தம்ச களனி பிரகடனம்” சிசிர ஜயக்கொடிவினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
வருகை தந்திருந்த மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க களனிக்கு உரிய பெருமையை பாதுகாக்கும் வகையிலான அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக பலமான பாராளுமன்றம் ஒன்றை பெற்றுத் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர் உட்பட மகாசங்கத்தினர், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் வேட்பாளர் பிரசன்ன ரணவீர, வைத்தியர் சீத்தா அரம்பேபொல ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
வேட்பாளர் நளின் பெர்ணான்டோ ஜா-எல நகர மத்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வருகை தந்திருந்த மக்களிடம் பிரதேசத்தின் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
கம்பஹா மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் புனர்நிர்மாணம் செய்து வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கும் ஜா-எல நகர அபிவிருத்திக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வேட்பாளர் லலந்த குணசேகர கட்டான, ஆண்டியம்பலம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் அரசாங்கம் முன்னெடுக்கும் சுபீட்சமிகு வீட்டுத் தோட்டம்” வேலைத்திட்டத்தை பாராட்டியதோடு, அதனை அபிவிருத்தி செய்வதற்காக மக்களை ஆர்வமூட்டுவதற்காக விகாரை மற்றும் மதத் தளங்களை பயன்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்டார்கள்.
விதைகள் மற்றும் பயிர்ச் செய்கை சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்கு அனைத்து மதத் தளங்களையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர். 20 வயதில் பட்டத்தை நிறைவு செய்வதற்கு “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கல்விக் கொள்கையை உடனடியாக செயற்படுத்துமாறு மாணவர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.