Breaking News

சுமந்திரன், சம்பந்தன் மஹிந்தவிடம் பதவி கேட்டுச் சென்றால் உதைதான் கிடைக்கும்

சுமந்திரனும் சம்பந்தனும் மஹிந்தவிடம் அமைச்சு பதவிகள் கேட்டுச்சென்றால் உதைவாங்கி ஓடவேண்டிய நிலையேற்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட சுயேட்சைக்குழு வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நேற்று (22) மாலை கோட்டைக்கல்லாறில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட சுயேட்சைக்குழு வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

எனக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது சிதறிப்போகும் என்று. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவனில் நானும் ஒருவன். தமிழர்களின் போராட்டம் உலகின் கவனத்தில் ஈர்க்கப்படுவதில்லையென்ற காரணத்தினாலேயே இது ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சிறந்த முறையில் செயற்பட்டது. சம்பந்தன் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பாக தலைவர் நியமித்தார். முன்னர் சிறந்த தலைவர்கள் இருந்து சிறந்த முறையில் கடமையாற்றினார்கள்.

ஆனால் அந்த கட்சி இன்று மாற்றமடைந்து இன்று தமிழ் மக்களை அடகுவைத்து தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை குழிதோண்டி புதைத்து மாற்று சமூகத்திடம் விற்றுவிட்டனர். அந்தளவுக்கு கேவலமான கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறிவிட்டது.



நாங்களும் தனி தமிழ் கட்சியாகவே வந்துள்ளோம். எமது உரிமைக்காக போராடுவது ஒருபுறம் இருந்தாலும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தியையும் சமாந்தரமாக கொண்டுசெல்ல வேண்டும். தேசியம் தேசியம் என்று பேசி இளைஞர்களின் வாழ்க்கையினை அழித்ததே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்புதான்.

இன்று கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான தமிழ் இளைஞர் யுவதிகள் வேலையற்ற நிலையில் உள்ளனர். அதிலும் அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான இளைஞர் யுவதிகள் உள்ளனர்.

இன்று பெருமளவான இளைஞர்கள் வேலையற்று இருப்பதற்கான காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். கடந்த மாகாண சபை காலத்தில் 11 உறுப்பினர்கள் வழங்கப்பட்டபோது அதனை ஏழு ஆசனங்கள் வைத்திருந்த முஸ்லிம்களிடம் தூக்கி வழங்கிவிட்டார். அதனை அவர்கள் பயன்படுத்தி அவர்களின் பகுதிகளில் தொழில்வாய்ப்புகளையும் அபிவிருத்திகளையும் செய்துவிட்டார்கள்.

கடந்த அரசாங்கத்தினை முட்டுக்கொடுத்து காப்பாற்றியவர் சம்பந்தன் அவர்களாவார். ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும் வாக்களிப்பதற்கு கோடிக்கணக்கான காசுகள் வாங்குவார்கள். உலக வரலாற்றிலேயே ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஒரு எதிர்க்கட்சி வாக்களித்தது என்றால் இங்குள்ள கிழட்டுக்கூட்டங்கள்தானாகும். இது எந்த நாட்டிலும் இடம்பெறாத நிகழ்வாகும். ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இரண்டு கோடிகள் வழங்கப்பட்டன. இதனை அவர்களுக்குள் இருந்த சிவசக்தி ஆனந்தன் என்பவரே தெரிவித்திருந்தார். இவர்களா தமிழ் மக்களுக்கு சேவை செய்யப்போகின்றார்கள் என்தை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.

தீபாவளிக்கு தீர்வு தருவோம் என்று கூறியவர்கள் இன்று தமது பாதையை மாற்றி தவறுகளை உணர்கின்றோம், அமைச்சுகளை எடுப்பது குறித்து பரிசீலிப்போம் என்கின்றனர். சுமந்திரனும் சம்பந்தனும் மஹிந்தவிடம் அமைச்சு பதவிகள் கேட்டுச்சென்றால் உதைவாங்கி ஓடவேண்டிய நிலையேற்படும். இவர்கள் அழிந்துபோவார்கள் என்று நன்றாக தெரியும் அனைவருக்கும். இதுபோன்ற பசப்பு வார்த்தைகளை பேசிபேசி எங்களை ஏமாற்றும் சமூகத்தினை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியம் பேசி பேசி எங்களை தேய்ந்து போகச்செய்த கும்பலை கலைக்கவேண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகளைப்பற்றி நான் மட்டுமே பேசுகின்றேன். வேறு எந்த அரசியல்வாதிகளும் பேசுவதில்லை. அனைவரும் அவர்களிடம் சோரம்போயிவிட்டார்கள்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவராக இமாம் என்னும் முஸ்லிம் இருக்கின்றார்.மறுபுறம் பிள்ளையானி;ன் கட்சியில் உபசெயலாளர் அசாத் மௌலான என்பவராகும்.இவர்கள்தான் பிள்ளையானை உள்ளுக்குள் அனுப்பியுள்ளனர்.கிழக்கு மாகாண வரலாற்றில் இனியொரு முஸ்லிம் முதலமைச்சர் வருவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது. சிங்கள சகோதரர்களுடன் இணைந்து நாங்கள் அந்த முதலமைச்சரை பெற்றுக்கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிகளில் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் யாரும் தகுதியான வேட்பாளர்கள் இல்லை. கருணா அம்மான் நிரந்தர அபிவிருத்தியை செய்யவில்லையென சிறிநேசன் தெரிவித்திருந்தார். அவரது வீட்டுக்கு மின்சாரம் வழங்கியவன் நானாகும். நான் செய்த சேவையினைப்போன்று வரலாற்றில் ஒரு எம்பி செய்திருக்கமாட்டான் மட்டக்களப்புக்கு.

இன்று அம்பாறை மாவட்டத்தில் அனைத்து மக்களும் என் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர். அம்பாறை மாவட்டம் மீது நாங்கள் கவனத்தினை செலுத்தவேண்டும். எனக்கு பிள்ளையான் மீது தனிப்பட்ட கோவம் இல்லை. பிரசாந்தன் இருக்கும் வரைக்கும் பிள்ளையான் வெளியில் வரமாட்டான். அவர் உள்ளுக்கிருப்பதே இவர்களுக்கு நல்லம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் உள்ள போராளிகள், அந்த கட்சிக்காக உழைத்திருந்தவர்களை வேட்பாளராக போட்டிருந்தால் நாங்கள் வரவேற்றிருக்க முடியும். மண் களவெடுப்பவர்களையும், வட்டிக்கு காசு கொடுப்பவர்களையும் வேட்பாளராக நியமித்து பாராளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மக்களுக்காக சேவைசெய்வார்கள்.



மஹிந்த, கோட்டா அரசாங்கம் குறைந்தது 20 வருடங்களுக்கு நீடிக்கும். இந்த 20 வருடத்தினை நாங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்திற்கும் எனக்குமிடையில் நல்ல நெருக்கம் இருக்கின்றது. எவ்வளவோ எனக்கு எதிராக கூக்குரல் இட்டார்கள் எதுவும் செய்யமுடியவில்லை. நேற்று ஒருவர் கடுவெலயில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் தூக்கியெறிந்துவிட்டது. அரசியல் மேடைகளில் பேசுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க முடியாது. அனைவரது ஊழல்களையும் தேர்தல் மேடைகள் மூலமே வெளியில் கொண்டுவர முடியும். சட்டம் தெரியாமல் நான் கதைக்கவில்லை என்னை மாட்டிவிடுவதற்கு.

தமிழர்களை கிழக்கில் கூண்டோடு ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். அண்மையில் ஒருவர் இராவணன் இஸ்லாம் மதத்தினை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். எதிர்காலத்தில் காரைதீவு சந்தியில் உள்ள விபுலானந்தர் சிலைக்கும் தொப்பியை போட்டு இவர் எங்களினத்தை சேர்ந்தவர் என்று சொல்லும் நிலையும் உருவாகலாம். கண்டி இராச்சியத்தினை வெள்ளைக்காரர்கள் பிடிக்கமுடியாது இருந்தபோது அங்கு சாமான்கொண்டு இறக்கியவர்களே இங்குள்ள முஸ்லிம்களாகும். திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கினை பாதுகாக்க வேண்டும். அதற்காக என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். கிழக்கில் தமிழர்கள் தங்களது செறிவினை அதிகரிக்கவேண்டும். அதற்காக குழந்தைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அண்மையில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது கூடுதலான வாக்கு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்பது வீதமான வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு கூட்டமைப்பு என்று வாக்களித்து எதனையும் பெறமுடியாது. தற்போது வீடு இல்லாமல்போய் விட்டது. ரவூப் ஹக்கீம் வீட்டின் முகடுவினை உடைத்துவிட்டு சென்றுவிட்டார். அமீர்அலி சுவரினை உடைத்துவிட்டு சென்றுவிட்டார் ஹாபீஸ் நசீர் அத்திவாரத்தினையே கிளப்பி சென்றுவிட்டார். இனி வீட்டைப்பற்றி யாரும் சிந்திக்கவேண்டாம்.



தேசியம் பேசிக்கொண்டு பாராளுமன்ற சுகபோகங்களை அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் தேசியம் தொடர்பில் கதைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு தகுதியே இல்லை.

கிழக்கு மாகாணத்தின் இருப்பினை தக்கவைப்பதற்கான வழியை முதலில் பார்க்க வேண்டும். ஹிஸ்புல்லாவின் அரபுக்கல்லூரியினை அரசாங்கம் பொறுப்பேற்றிருக்காக விட்டால் அதன் ஊடாக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். தற்போதும் உலமாக்கள் சபை ஊடாக அரேபிய நாடுகள் பெருமளவிலான நிதியை வழங்குகின்றது. கிழக்கில் காணிகளை கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா இன்று 800 ஏக்கர் காணியை வாங்கி வைத்துள்ளார்.தமிழர்களின் பெயரிலேயே இந்த காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றது. என்றார்.