முல்லைத்தீவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பச்சைப்புல் மோட்டை பகுதியில் போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் நேற்று முன்தினம் (27) மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (27) ஆனந்தபுரம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைந்து காணப்பட்ட தடையபொருள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு குறித்த பகுதி வெடிபொருட்கள் அகற்றும் சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் காலை தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது நிலத்திற்குள் பாதுகாப்பாக பொதிசெய்யப்பட்ட 10 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றும், மிதிவெடிகள் 109, வெடிமருந்து 1.5 கிலோகிராம் உள்ளிட்ட வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் கொண்டு சென்றுள்ளார்கள்.