சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்!
எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பெறுவதென தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அரச பாடசாலைகளின் ஊடாக தோற்றுவோர் அதிபர் மூலமாக ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பது அவசியம். இதற்குரிய முகவரி www.doenets.lk என்பதாகும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான முகவரி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பாடசாலை பரீட்சை ஒருங்கிணைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவு, பரீட்சைத் திணைக்களம், தபால் பெட்டி – 153, கொழும்பு என்பதாகும்.
தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2020 என்பதையும் விண்ணப்பதாரியின் நகரத்தின் பெயரையும் குறிப்பிடல் வேண்டும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.