தமிழகத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் !
இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தனது ராக்கெட்டுகளை பல ஆண்டு காலமாக ஏவி வருகிறது.
பல செயற்கைகோள்கள், சந்திரயான்1 மற்றும் 2 போன்ற பல சாதனை திட்டங்களை அங்கிருந்து செயல்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதியில் அமைய உள்ளது.
டாக்டர் சிவன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த வருடம் மீண்டும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதற்கு சுமார் 2300ஏக்கர் நிலம் தேவைப்படும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிக்கை ஒன்றை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார்.
குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்ததற்கு காரணம் அது பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் தான். இதன் காரணமாக தான் 1960களில் கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகள் இஸ்ரோவின் பார்வையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆந்திராவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை இலங்கையை சுற்றி கொண்டு தான் பூமியின் தென்துருவத்திற்கு செல்கின்றன. ஆனால் இந்தியாவின் தென்பகுதியில் ஏவுதளம் இருந்தால் சுற்றி போகாமல் நேரடியாக தென் துருவத்திற்கு ராக்கெட்டை செலுத்த முடியும்.
அதைப்போல பூமத்திய ரேகைக்கு எந்தளவுக்கு அருகில் ஏவுதளம் உள்ளதோ அந்தளவுக்கு எரிபொருள் சிக்கனம், அதிக உந்துதல் ராக்கெட்டிற்கு கிடைக்கும்.
இங்கிருந்து எஸ்.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ஆகிய ராக்கெட்டுகளை ஏவும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்திற்கு இத்திட்டத்தை ஈர்க்க முயற்சித்த நிலையில் பூமத்திய ரேகையில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் இஸ்ரோ நாட்டம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.