பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி!
பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்து அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தனது வீட்டின் முன்னே விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவர் மாயமானதால் அவரது பெற்றோர்கள் சிறுமியை தேடி வந்தனர். இரவு வரை கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் கருவேல மரங்கள் நிறைந்த கண்மாயில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 29 வயதான ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் #JusticeforJayapriya ன்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.