உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி? விசாரணைகள் நிறுத்தப்பட்டன!
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
மேலும் குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
இதேவேளை, குறித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்காரவும் நேற்று (02) 9 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.