திருச்சியில் 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொல்லப்பட்ட கொடூரம் - காவல்துறை விசாரணை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி (வயது 14) அவர், இன்று முள்ளுக்காட்டில் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மாணவி எரித்துக் கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்து அதன் பின்னர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தீவைத்து எரிக்கப்பட்டாரா என்று இரு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்,
அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குவந்த திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கொல்லப்பட்ட பெண்ணின் உடல் ஏற்றப்பட்ட அவசர ஊர்தியின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதனையடுத்து, திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார். முதல் கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட சிறுமி, குப்பை கொட்ட இன்று மதியம் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார் என்பதும் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது. கங்காதேவியைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியை கொலை செய்தது யார் ? இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், சம்பவ இடத்தில் காணப்பட்ட செல்போன் சிக்னல்கள் மூலம் முழுமையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை விரைவாக பிடித்து விடுவோம் என்று சம்பவ இடத்திற்கு வந்த டி.ஐ.ஜி ஆனி விஜயா உறுதி அளித்தார்.