‘வாடிவாசல்’ கதை பற்றி வெளியான தகவல்! இரண்டு வேடங்களில் சூர்யா? - வெற்றிமாறன்
நடிகர் சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்து விட்டு அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அவரது 2டி நிறுவனம் மற்றும் குனுத் மோங்கா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அதனை ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கிறார் சூர்யா.இந்நிலையில் அடுத்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருந்தார். அந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அது முழு ஊரடங்கு காரணமாக துவங்க முடியாமல் போனது.
இந்நிலையில் சூர்யா அதற்கு அடுத்து நடிக்க உள்ள வாடிவாசல் படம் பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்க உள்ள நிலையில், இந்த படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் அப்பா மற்றும் மகன் ஆகிய கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு பல படங்களில் சூர்யா இதுபோன்று நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம், விக்ரம் குமார் இயக்கிய 24 உள்ளிட்ட படங்களில் அவர் அப்பா மகன் ரோல்களில் நடித்துள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். இதற்கான பணிகளை அவர் கொரோனா முழு ஊரடங்கு போடப்பட்ட நேரத்திலேயே துவங்கி விட்டார். அதை அவர் ட்விட்டரில் கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல் படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது மட்டுமின்றி மற்றொரு தகவலும் உலா வருகிறது. இது ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் கதை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரம் ஒரு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முற்படும்போது உயிரிழக்கும் வகையில் கதை இருக்கும் என்று கூறப்படுகிறது. முதலில் அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் அல்லது ராஜ்கிரனை நடிக்க வைக்கத் தான் படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இறுதியில் சூர்யாவே அந்த ரோலில் நடிக்கப் போகிறார் என தற்போது கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை.
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைவது இது தான் முதல் முறை. அதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சினிமா படங்களின் ஷூட்டிங் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதற்காகத் தான் ஒட்டு மொத்த சினிமா துறையும் காத்துக் கொண்டு இருக்கிறது. அரசு அனுமதி கிடைத்ததும் சூர்யா வாடிவாசல் அல்லது அருவா படத்தில் நடிக்கத் துவங்குவார் என தெரிகிறது. சூர்யா அருவா படத்திற்கு முன்பு வாடிவாசல் படத்தில் நடிப்பார் என உறுதி செய்யப்படாத சில தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவியது குறிப்பிடத்தக்கது. இதில் உண்மை என்ன என்பது சூர்யா தரப்பு உறுதியாக அறிவித்தால் தான் தெரியவரும். அருவா படத்திலும் சூர்யா இரண்டு ரோல்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.