இந்திய அணியை நாங்கள் நிறைய முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் : அஃப்ரீடி சீண்டல்!

பாகிஸ்தானுடன் தோற்கும் போது இந்திய வீரர்கள் மன்னிப்புக் கேட்காத குறைதான், இந்திய அணியை நாங்கள் ஏகப்பட்ட முறை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம் என்று ஷாகித் அஃபீரி மீண்டும் சீண்டியுள்ளார். 

புள்ளிவிவர ரீதியாக ஷாகித் அஃப்ரீடி கூறுவது சரிதான், டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 59 முறை மோதியுள்ளனர், இதில் பாகிஸ்தான் 12 முறை வெல்ல, இந்திய அணி 9 முறைதான் வென்றுள்ளது. 50 ஒவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 73 போட்டிகளில் வெல்ல இந்திய அணி 55 போட்டிகளில்தான் இதுவரை வென்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டில்தன இந்திய அணி 8 போட்டிகளில் பாகிஸ்தானை 6 முறை பந்தாடியுள்ளது. 
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் அப்ரீடி கூறும்போது, “நாங்கள் நிறைய முறை இந்திய அணியை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம். அத்தனை முறை தோற்கடித்திருக்கிறோம் என்றால் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் எங்களிடம் மன்னிப்புக் கேட்காத குறைதான். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நான் ஆடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நமக்கு அழுத்தம் அதிகம் இரு அணிகளும் சிறந்த அணிகள். அவர்கள் நாட்டில் சென்று சிறப்பாக ஆடுவது பெரிய விஷயம். 

இந்திய ரசிகர்கள் என்னை நேசிப்பவர்கள் என்று 2016-ல் கூறினேன் அதிலிருந்து நான் மாறவில்லை. நான் சிலதைக் கூறுவேன் பிறகு அதற்கு மன்னிப்பும் கேட்பேன். தவறாகப் பேசினால் மன்னிப்புக் கேட்கும் பெரிய இதயத்தை எனக்கு அல்லா அளித்துள்ளார். 

2016-ல் டி20 உலகக்கோப்பைக்கு அங்கு செல்லும் போது பாகிஸ்தான் கேப்டனாக மட்டுமல்ல பாகிஸ்தான் தூதராகவும் என்னை கருதினேன். அப்போது இந்தியாவில் கிடைத்த ரசிகர்கள் ஆதரவு பற்றி நான் கூறிய கருத்து நன்கு படித்தவர்களுக்கும், அறிவுஜீவிகளுக்குமானது” என்றார் அப்ரீடி.