கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது புகார் விசாரணை!
வீ சாரிட்டி அறக்கட்டளைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பத்தோடு தொடர்புடைய அறக்கட்டளைக்கு அரசு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரில் அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தன்னார்வ பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்க கனடா 6700 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வீ சாரிட்டி என்னும் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், கடந்த வெள்ளியன்று இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புகார் குறித்து ட்ரூடோ மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கனடா அறநெறி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.