Breaking News

பொள்ளாச்சி பாணியில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்!

பொள்ளாச்சி பாணியில் வீடியோ எடுத்து இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பொள்ளாச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாத நிலையில், அந்த தைரியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் காசி மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். காசி வழக்கிலும் சரி, பொள்ளாச்சி வழக்கிலும் சரி தற்போது வரை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை யாரும் தண்டிக்கப்பட வில்லை. இந்த தைரியத்தில் தான், தமிழகத்தில் மீண்டும் இதே பாணியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான மாது, கடந்த சில ஆண்டுகளாகத் திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் தனது 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். 

மாது, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, தன்னுடன் பணியாற்றும் 24 வயது இளம் பெண்ணை, காதலிப்பதாக நாடகம் ஆடி, அந்தப் பெண் தனியாக இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டு அவரை மிரட்டித் தான் நினைக்கும் போதெல்லாம் பல முறை அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

இது குறித்து, யாரிடமாவது வெளியே சொன்னால் அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி விட்டு விடுவதாகவும் தொடர்ந்து, அவர் மிரட்டி வந்துள்ளார்.  

இதனையடுத்து, கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தனது சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் மாது சென்று விட்டார். இதனால், அந்த இளம் பெண் நிம்மதி பெருமூச்சு விட்டார்.  

அந்த பெண்ணும், ஊர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், மாதுவின் மிரட்டல் போன் மூலம் மீண்டும் தொடர்ந்துள்ளது. இதனால், பயந்துபோன அந்த இளம் பெண், மாதுவின் மிரட்டல் குறித்து, தன் பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், இது குறித்து வெளியே சொன்னால் அசிங்கம் என்று நினைத்துக்கொண்டு, தன் பெண்ணிற்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 

அப்போது, இந்த திருமண ஏற்பாடுகள் குறித்து அறிந்துகொண்ட மாது, மாப்பிள்ளையின் செல்போன் நம்பரை எப்படியோ பெற்றுக்கொண்டு, அவரின் செல்போன் எண்ணிற்கு, அந்த இளம் பெண்ணின் வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி வைத்துள்ளார். இதனால், இரு இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.  

மேலும், இது குறித்து கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட இளம் பெண், இதற்கு மேலும் பொறுக்க முடியாத நிலையில், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாதுவை கைது செய்தனர். அத்துடன், மாதுவிடமிருந்து சம்மந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அவரை சிறையில் அடைத்தனர்.