Breaking News

சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி! - 2020 பொதுத் தேர்தல்

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தமானி தொடர்பில் நீண்ட இழுபறி நிலவிய நிலையில், இன்று காலை சட்டமா அதிபரின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது வர்த்தமானி வெளியாகியுள்ளது. 

அந்த வர்த்தமானியில், 

ஒழுங்குவிதிகள் 1. இவ்வொழுங்குவிதிகள் 2020 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, கொரோனா வைரஸ் தொற்று நோய் 2019 (கோவிற் 19) (தேர்தல்கள்) ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம். 

2. ஒரு தேர்தற் காலப்பகுதியின்போது தேர்தலொன்று தொடர்பாகக் கூட்டமொன்றை ஒழுங்குபடுத்துவதற்கு உட்கருதுகின்ற ஆள் ஒவ்வொருவரும், அத்தகைய கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குக் குறையாமல் எழுத்திலான அறிவித்தலை, அத்தகைய கூட்டம் எந்த இடப்பரப்பில் நடைபெறவுள்ளதோ அந்த இடப்பரப்பின் சுகாதார மருத்துவ அலுவலருக்குக் கொடுத்தல் வேண்டும். 

3. இரண்டாம் ஒழுங்குவிதியின்கீழான அறிவித்தலைக் கொடுக்கின்ற ஒழுங்கமைப்பாளர், அத்தகைய கூட்டத்துக்கு வருகை தரும் ஆட்களின் எண்ணிக்கை முந்நூறை விஞ்சாதிருத்தலை உறுதிப்படுத்துதல் வேண்டும்: ஆயின், எவ்வாறாயினும், அரசியற் கட்சியொன்றின் அல்லது சுயேச்சைக் குழுவொன்றின் தலைவர் அத்தகைய கூட்டத்தில் பங்குபற்றுமிடத்து, அத்தகைய கூட்டத்துக்கு வருகைதரும் ஆட்களின் எண்ணிக்கை ஐந்நூறை விஞ்சுதலாகாது. 

4. ஒழுங்கமைப்பாளர் (அ) அத்தகைய கூட்டத்துக்கு வருகைதருகின்ற ஆள் ஒவ்வொருவரினதும் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்புகொள்ளும் விபரம் பற்றிய பதிவேட்டை பேணுதல் வேண்டும். 

(ஆ) அத்தகைய கூட்டத்துக்கு வருகை தருகின்ற ஆட்களுக்குச் சவர்க்காரத்தினால் அல்லது கிருமி நீக்கியினால் கைகழுவுவதற்கான போதிய வசதியை வழங்குதல் வேண்டுமென்பதுடன் அத்தகைய வளவுகளுக்கு வருகை தருகின்ற ஆள் ஒவ்வொருவரும் அவ்வளவுகளினுட் பிரவேசிக்குமுன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும். 
(இ) அத்தகைய கூட்டத்துக்கு வருகைதருகின்ற பேச்சாளர்களுட்பட இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும். 
(ஈ) அத்தகைய கூட்டத்துக்கு வருகைதருகின்ற ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசமொன்றை அணிந்திருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்; அத்துடன் 
(உ) ஆளொருவரினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் உடனடியாக ஒலிபரப்பியுட்பட சாதனங்களைத் தொற்றுநீக்கஞ் செய்தல் வேண்டும் அல்லது தொற்றுநீக்கஞ் செய்வித்தல் வேண்டும். 



5. தேருநர்களின் வாக்குவேண்டி பிரசாரஞ்செய்யும் அல்லது துண்டுப்பிரசுரங்களை அல்லது வேறு அச்சிடப்பட்ட வெளியீடுகளை விநியோகிக்கும் நோக்கத்துக்காக ஒரு தேர்தற் காலப்பகுதியின்போது அத்தகைய தேருநர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்கின்ற ஓர் ஆட்கள் தொகுதியினர் ஐந்து பேரை விஞ்சுதலாகாது. 

6. ஐந்தாம் ஒழுங்குவிதியில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஆட்கள் தொகுதியினர் – (அ) எல்லா நேரங்களிலும் முகக்கவசமொன்றை அணிதல் வேண்டுமென்பதுடன் தமக்கிடையேயும், தமக்கிடையேயும் வீட்டிலுள்ள குடியிருப்பாளர்களுக்கிடையேயும் ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைப் பேணுதலும் வேண்டும்; அத்துடன் 
(ஆ) வீட்டிலுள்ள குடியிருப்பாளர்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கு முன்னர் தமது கைகளைக் கிருமி நீக்கஞ்செய்தல் வேண்டும். 

7. ஏதேனும் தேர்தலிலான வேட்பாளர் ஒவ்வொருவரும் – (அ) அத்தகைய வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்துக்கும் அதன் வளவுகளுக்கும் விஜயஞ் செய்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரத்தினால் அல்லது கிருமிநீக்கியினால் கைகழுவுவதற்கான போதிய வசதியை வழங்குதல் வேண்டுமென்பதுடன் அத்தகைய அலுவலகத்துக்கும் அதன் வளவுகளுக்கும் விஜயஞ் செய்கின்ற ஆள் ஒவ்வொருவரும் வளவுகளினுட் பிரவேசிப்பதற்குமுன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும்; 

(ஆ) அத்தகைய அலுவலகத்திலும் அதன் வளவுகளிலும் இரு ஆட்களுக்கிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும்; 
(இ) அத்தகைய அலுவலகத்துக்கும் அதன் வளவுகளுக்கும் விஜயஞ்செய்கின்ற ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசமொன்றை அணிவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்; 
(ஈ) அத்தகைய அலுவலகத்தினுள்ளும் அதன் வளவுகளினுள்ளும் மதுபானம் எதுவும் கொண்டுவரப்படாதிருப்பதனை அல்லது உட்கொள்ளப்படாதிருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்; அத்துடன் 
(உ) அத்தகைய அலுவலகத்திலும் அதன் வளவுகளிலும் விளையாட்டுக்கள் அல்லது திறனாட்டங்கள்எவற்றையும் விளையாடாதிருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும். 



8. ஏதேனும் வாக்கெடுப்பு நிலையத்திலும் அதன் வளவுகளிலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் அதன் வளவுகளிலும், தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திலும் அதன் வளவுகளிலும் உள்ள ஆள் ஒவ்வொருவரும்- 

(அ) வாக்கெடுப்பு நிலையத்தினுள்ளும் அதன் வளவுகளினுள்ளும், வாக்கெண்ணும் நிலையத்தினுள்ளும் அதன் வளவுகளினுள்ளும், தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகத்தினுள்ளும் அதன் வளவுகளினுள்ளும் பிரவேசிப்பதற்கு முன்னர் தமது கைகளைச் சவர்க்காரத்தினால் அல்லது கிருமிநீக்கியினால் கிருமிநீக்கஞ்செய்தல் வேண்டும்; 
(ஆ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைப் பேணுதல் வேண்டும்; அத்துடன் 
(இ) எல்லா நேரங்களிலும் முகக்கவசமொன்றை அணிதல் வேண்டும். 

9. இவ்வொழுங்குவிதிகளில் – “ஒரு தேர்தல் காலப்பகுதியின் போது” என்பது, விடயத்துக்கேற்ப, மக்கள் தீர்ப்பொன்றை எடுப்பதற்கான அல்லதுதேர்தலொன்றை நடாத்துவதற்கான பிரகடனமொன்று அல்லது கட்டளையொன்று ஆக்கப்படுவதன்மீது தொடங்கி, விடயத்துக்கேற்ப, அத்தகைய மக்கள் தீர்ப்பில் அல்லது தேர்தலில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் பெறுபேறு வெளிப்படுத்தப்படுகின்ற திதியன்று முடிவடையும் காலப்பகுதி என்று பொருளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.