Breaking News

சாதி மறுப்பு திருமணத்துக்கு மறுத்த பெண் காதலனால் குத்தி கொலை..!

கோயம்புத்தூர் பேரூர் அருகே காதலித்து விட்டு சாதி மறுப்பு திருமணத்திற்கு சம்மதிக்காத மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர், அந்த பெண்ணின் தந்தையையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அடுத்த ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் பால்காரர் சக்திவேல் இவரது 17 வயது மகளை, அதே ஊரை சேர்ந்த சந்திரன் மகன் ரித்தீஷ் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

சக்திவேலின் மகள் கல்லூரியில் படித்து வந்த நிலையில் வைண்டிங் வேலைக்கு சென்று வந்த ரித்தீஷ் விரட்டி விரட்டி காதலித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவியை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்திய ரித்தீஷ், ஊரடங்கால் காதலியை சந்திக்க இயலாமல் தவித்துள்ளார். இதற்கிடையே மாணவியின் தந்தைக்கு இவர்களது காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.

இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், படிக்கின்ற வயதில் காதல் தேவையில்லாதது என்றும், தந்தை உரியமுறையில் புத்தி சொன்னதால், அந்த மாணவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ரித்தீஷ் உடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

17 வயது சிறுமியை காதலிப்பது சட்டப்படி குற்றம் என்பது தெரிந்தும் ரித்தீஷ், சிறுமியை உடனடியாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியே வர அழைத்ததாக கூறப்படுகின்றது.

அதற்கு அந்த சிறுமி மறுத்துவிட்ட நிலையில் ஏமாற்றம் அடைந்த ரித்தீஷ், தனக்கு கிடைக்காத அந்த சிறுமி உயிரோடு இருக்க கூடாது என்ற குரூர எண்ணத்தில் வெள்ளிக்கிழமை மாணவியின் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். அதனை தடுக்க வந்த சிறுமியின் தந்தையையும் கைகளில் குத்திவிட்டு தப்பியுள்ளான் காதல் கொடூரன் ரித்தீஷ்.

இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி சிகிசைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த பேரூர் காவல்துறையினர் காதல் கொலையாளி ரித்தீஷை தேடி வருகின்றனர். தந்தையின் கண்முன்னே மாணவியை கண்மூடித்தனமாக குத்திய கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

17 வயது சிறுமியை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்ததாக கொலை செய்வது என்பது காதல் ஆணவத்தில் செய்யும் கொடூர செயல் என்றும் சிறுமிகளுக்கு எதிராக இத்தகைய குரூர மனம் கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதே நேரத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் காதல் வலை வீசும் நபர்களின் பின்புலம் அறியாமல் பழகினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கொடூர சம்பவம்.