அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்! - இன்று கரும்புலிகள் நாள்!
இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.
இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன், உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.
தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.
தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள்.
பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள்.
எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட இரும்பு மனிதர்கள் அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச் சென்றுள்ளார்கள்.
அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள். அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல, எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்கள்.
நேற்று வரை மட்டுமல்ல, இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்.அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம் இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை தமிழீழ மக்களாகிய நாம் தலைசாய்த்து வணங்கி அவர்களின் இலட்சியமான தமிழீழ விடுதலைக்கும், தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, பணி செய்வோம் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஓப்ரேஷன் லிப்ரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக புலிகள் இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொண்ட வேளையில் அதனை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் தற்கொலை தந்திரோபாயம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தற்கொலைதாரிகளாக சென்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள திலீபன் உட்பட புலிகளின் மூத்த தளபதிகள் பலர் போட்டியிட்ட போதிலும் கப்டன் மில்லர் என்ற போராளிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்கிறது புலிகளின் பதிவொன்று!
1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைக்கொண்டு குடாநாட்டை முற்றுகையிடுவதற்கான அடுத்தக்கட்ட தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்த இலங்கை இராணுவத்தினர்மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தில் சென்று கப்டன் மில்லரினால் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் மூலம் இலங்கை இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டதாக புலிகள் அறிவித்தனர். இதனையடுத்து குடாநாட்டை கைப்பற்றும் திட்டமும் இராணுவத்தினரால் கைவிடப்பட்டது.
தொடர்ந்து வந்த காலங்களில் தற்கொலை தாக்குதல் என்பது தங்களைப் பொறுத்தவரையில் அதியுச்ச போர் உபாயமாக கைக்கொள்ளப்படுவதாக புலிகள் தெரிவித்தனர்.
தற்கொலை போராளிகளின் உயிர் தியாகத்தை கௌரவிக்கும் முகமாக முதலாவது தற்கொலை போராளியான கப்டன் மில்லர் தாக்குதல் நடாத்திய ஜுலை 5ஆம் திகதி தேசிய கரும்புலிகள் தினமாக பிரகடனப்படுத்துவதாக புலிகள் தெரிவித்தனர்.
குறித்த தினம் புலிகள் செயற்பட்ட காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது புலம் பெயர் நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறைந்த இழப்புக்களுடன் எதிரிகளுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களிலும் படையணிகளால் நுழைய முடியாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்கும் தற்கொலை தாக்குதல் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.
அந்தவகையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவிக்கும் வரை ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்கொலை போராளிகளாக தங்கள் உயிர்களை மாய்திருக்க கூடும் என நம்பப்படுகின்றது.
எனினும் இறுதியாக 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட உத்தியோகப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் 322 உறுப்பினர்கள் தற்கொலை தாக்குதல்களை நடத்தி உயிர்களை மாய்த்துள்ளனர்.